நம்மில் சிலருக்கு, சில பொருட்களைப் பார்க்கும் போது அல்லது சில விஷயங்களைச் செய்யும் போது இயற்கைக்கு அதிகமான பய உணர்ச்சி ஏற்படுவது உண்டு. இதை ஆங்கிலத்தில் ஃபோபியா (Phobia) எனக் கூறுவதுண்டு.
உதாரணமாக ஆக்ரோஃபோபியா என்பது கடும் சூறைக்காற்றைக் கண்டால் வரும் பயம். ஆம்புலோஃபோபியா என்பது வெளியில் சென்று நடப்பதற்கு பயம். இப்படி பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கான காரணத்தை குறிப்பிட்டுக் கூற இயலாது. அது ஜெனெடிக் அல்லது சைக்கலாஜிக்கல் அல்லது சுற்றுச் சூழல் சம்பந்தப்பட்ட ஏதாவதொன்றாக இருக்கலாம்.
இதுபோல ஒன்றுதான் இந்த ஆர்த்தோரெக்சியா நெர்வோசா என்பது. இந்த பயத்தினால் பீடிக்கப்பட்ட ஒருவரை 'ஈட்டிங் டிஸ்ஸாடர்' (Eating Disorder) கோளாறு உள்ளவர் என்பர். அந்த குறிப்பிட்ட நபர், மிகக் குறைந்த அளவில் உணவை எடுத்துக் கொள்வது அல்லது சில நேர உணவை முழுவதுமாகத் தவிர்த்துவிடுவது போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
இந்தக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த நேரமும், தான் உட்கொள்ளவிருக்கும் உணவு தரமானதாக இருக்குமா, அப்படி இல்லாதபட்சத்தில், அதை உண்பதால் தனக்கு உடல் நலக்கோளாறுகளெல்லாம் உண்டாகுமோ, உணவின் தயாரிப்பில் என்னென்ன குறைபாடுகள் இருந்திருக்குமோ என்ற சிந்தனையிலேயே சரியாக உணவு உட்கொள்ளாமல் நாட்களைக் கழித்துக் கொண்டிருப்பர். இதன் காரணமாக அவர்களின் உடல் நிலை, மனநிலை மற்றும் உறவு முறையிலும் பலவிதமான பாதிப்புகள் உண்டாகக் கூடும். இந்த மாதிரி சிந்தனையில் அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவை குறைத்துக் கொண்டே போகும்போது, ஊட்டச் சத்துக்களின் குறைபாட்டினால் அவர்களது ஆரோக்கியம் கெட ஆரம்பிக்கும். உடல் சோர்வடையும். நோயெதிர்ப்பு சக்தி குறையும். ஹார்மோன் சம நிலையில் வேறுபாடு உண்டாகும்.
இந்நோயிலிருந்து விடுபட அனுபவம் மிக்க மருத்துவரை கலந்தாலோசித்து, தேவைப்படும்போது மனநல மருத்துவரின் உதவியையும் நாடி சிகிச்சை பெற்றுக்கொள்வது நலமளிக்கும்.