
தூக்கமின்மைக்கு நிறைய காரணங்கள் உள்ளன. குறிப்பாக மன அழுத்தம் வேலை பிரச்சனை, குடும்ப பிரச்சனை இரவில் அதிக நேர பணி, மைக்ரேன் தலைவலி எனப் பல காரணங்கள் உண்டு. இவற்றோடு நரம்பியல் பிரச்சனையும் ஒரு காரணமாக உள்ளது.
ஒரு சராசரி மனிதனுக்கு ஒன்பது மணி நேரம் தூக்கம் அவசியம். தூங்க ஆரம்பித்ததும் முதல் 90 நிமிடம் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்கிறார்கள் அதன்பின்னர் திரும்பி அல்லது புரண்டு படுக்கிறார்கள். அதன் பின்னர் 20 நிமிடங்களில் மீண்டும் ஆழ்ந்த தூக்கம் ஏற்படுகிறது. மிதமான உறக்கம் அதிகாலை ஏற்படும். இந்தச் சூழ்நிலையில் தான் அதிக கனவுகள் வரும். அதிகாலை வருவதால் சில கனவுகள் நம் நினைவில் இருக்கும். ஆழ்ந்த உறக்கம், மிதமான உறக்கம், விழிப்பு இந்த மூன்றும் தொடர்ந்து நடைபெற வேண்டும். இந்த மூன்று செயலும் தினசரி தூக்கத்தில் சுழற்சி முறையில் நடைபெறும் செயலாகும்.
இந்த மூன்று செயலும் தினசரி இரவில் ஏழு முறை நடைபெற வேண்டும். நரம்பு மண்டலத்தில் உள்ள கிளிம்பேடிக் என்ற அமைப்பு நம் உடலில் கன்ட்ரோல் செய்கிறது. கண்கள் அசைவும் முக்கிய காரணமாகும்.
ஆறு மணி நேரம் தூங்கினால் இந்த சுழற்சி முறை குறையும். இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறாமல் நரம்பு மண்டலம் பாதிக்கப்படக்கூடும். தொடர்ந்து நச்சுக்கள் சேர்ந்து மூளையில் படிந்துவிடும். இதன் பின்னர் மறதி நோய் டிமென்ஷியா அல்சைமர் ஏற்பட வாய்ப்பு உண்டு. பொதுவாக இந்தப் பிரச்னைகள் 60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு தான் அதிகமாக இருக்கும். தற்காலத்தில் 45 வயதிலேயே இதன் தாக்கம் உள்ளது. இதற்கு காரணம் உடற்பயிற்சியின்மை மன அழுத்தம் போன்றவை. எனவே, தினசரி நடை பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை மூலம் இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
இரவில் அதிக நேரம் மொபைல் பார்ப்பதும் ஒரு காரணமாகும். அடுத்த 10 ஆண்டுகளில் தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் தலை தூக்கும். வருமுன் காப்பது சிறந்தது. மனதை அமைதியாகவும் வீட்டிலேயே எளிய முறை உடற்பயிற்சிகள் யோகா, தியானம் நடைப்பயிற்சிகள் செய்து இதனை முடிந்தவரை சமாளிக்கலாம் முடியாத பட்சத்தில் டாக்டரை பார்ப்பது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)