

நீண்ட நேரம் டிவி பார்ப்பது, மணிக்கணக்கில் மொபைல் பயன்படுத்துவது, கம்ப்யூட்டரில் தொடர்ச்சியாக வேலை செய்வது டைப் 2 சர்க்கரை நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை மோசமாக பாதிக்கிறது என்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் டைப் 2 சர்க்கரை நோயால்(Diabetes) பாதிக்கப்பட்ட 217 நபர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களின் தினசரி டிவி நேரம், தூக்க பழக்கம், மொபைல் பயன்பாடு ரத்த சர்க்கரை அளவு ஆகியவை குறித்து கேட்ட பின் இத்தகைய நாட்களாக இருந்த டிவி பார்க்கும் நேரம் மற்றும் மொபைல் பயன்பாட்டை எந்த அளவு முடியுமோ அவ்வளவு நேரம் குறைக்க வேண்டும் என்று ஆலோசனை தரப்பட்டது.
டிவி பார்க்கும் நேரம் மட்டும் ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்களாக குறைக்கப்பட்டது. மொபைல் உபயோகிக்கும் நேரத்தையும் முடிந்த அளவு குறைத்து ஆய்வு செய்யப்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பின் இவர்களின் ரத்த சர்க்கரை அளவை முந்திய முடிவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பது தெரிய வந்தது.
நீண்ட நேரம் டிவி பார்ப்பதால் உடல் செயல்பாடு குறைகிறது. அதிக உணவு மற்றும் மோசமான தூக்கம், மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் போகிறது. குறிப்பாக உறங்க செல்லும் முன் டிவி பார்க்கும் நேரத்தை குறைப்பது இயல்பாகவே இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது என்பதை ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
காலை எழுந்ததும் முதல் ஒரு மணி நேரம், இரவில் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக டிவி, கம்ப்யூட்டர், மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். கம்ப்யூட்டர் முன் இருக்கும் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 வினாடிகள் 20 அடி தூரத்தை பார்ப்பது, நேரத்தை கடிகாரத்தில் பார்ப்பது, ஸ்க்ரோலின் செய்வதற்கு பதிலாக நடை பயிற்சி செய்வது, புத்தகங்கள் படிப்பது, இரவு உணவை டிவி பார்க்காமல் குடும்பத்தினுடன் சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
கண்களுக்கும், இரத்த சர்க்கரைக்கும் மொபைல், கம்ப்யூட்டர் திரையில் இருந்தும் ஓய்வு அவசியம். எனவே, நாம் அனைவரும் டிவி, மொபைல், கம்ப்யூட்டர் இவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதில் இருந்து சிறிது இடைவெளி கொடுத்தால் டைப் 2 சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)