கோடைக்காலம் வந்துவிட்டாலே, 'உஸ்… அப்பா... என்னா வெயிலு' என்று பலரும் புலம்பித்தள்ள ஆரம்பித்து விடுவார்கள். புலம்புவதை விட்டுட்டு, உடலுக்குக் குளிர்ச்சி தரும் எட்டு வித பானங்களை அவ்வப்போது அருந்தி, உடல் உஷ்ணத்தைக் குறைக்கலாமே. அந்த எட்டுவித ஹோம்மேட் குளிர் பானங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
* பிரசித்தி பெற்றதும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடியதுமான லெமன் வாட்டர் தயாரிப்பது மிகவும் எளிது. ஒரு டம்ளர் தண்ணீரில் லெமன் ஜூஸைப் பிழிந்து சிட்டிகை அளவு உப்பும், சர்க்கரையும் சேர்க்க லெமன் வாட்டர் தயார். உடலுக்குத் தேவையான வைட்டமின் C மற்றும் நீரேற்றம் தரக்கூடியது இந்த ஜூஸ்.
* ஜீரணத்துக்கு உதவக்கூடிய புரோபயோட்டிக் சத்துக்கள் நிறைந்தது பட்டர் மில்க். யோகர்டில் தண்ணீர் கலந்து வறுத்த ஜீரகப் பவுடர் மற்றும் உப்பு சேர்க்க குளிர்ச்சியான பட்டர் மில்க் ரெடி.
* சூழ்நிலை உஷ்ணத்தால் உடல் நீரிழப்பை எதிர்கொள்ளும்போது உயிர் காக்கும் தோழனாய் முன் நிற்பது இளநீர். இதிலுள்ள இயற்கையான சர்க்கரை, மக்னீசியம், சோடியம் மற்றும் பொட்டாசியமானது உடனடி சக்தியளித்து நீர்ச்சத்தை சமநிலைப்படுத்துகிறது.
* தண்ணீரில் இஞ்சிச் சாறு, ஜீரகம், புதினா இலை, கொத்தமல்லித் தழை உப்பு சேர்த்து தயாரிக்கப்படுவது, ‘ஜல்ஜீரா’ எனப்படும் பானம். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் புத்துணர்வையும் தருவதோடு, செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
* வாட்டர் மெலன் துண்டுகளில் உப்பும் ஐஸ் வாட்டரும் சேர்த்து ஜூஸாக்கி அருந்த உடலுக்கு உடனடி குளிர்ச்சி கிடைப்பதுடன், உடலும் மனதும் ரிலாக்ஸ் ஆகும்.
* ஒவ்வொரு இந்தியனுக்கும் விருப்பமானது வெப்ப மண்டலத் தாவரமான கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் கரும்பு ஜூஸ். கரும்பு ஜூஸுடன் லெமன் ஜூஸ், இஞ்சிச் சாறு, புதினா மற்றும் பல்வேறு ஸ்பைசஸ் சேர்த்து தயாரிக்கப்படுவது இது. இதிலுள்ள ருசியும் ஆரோக்கியமும் புத்துணச்சி தரும்; நீரிழப்பைத் தடுக்கும்.
* வெள்ளரித் துண்டுகளுடன் உப்பும் நீரும் சேர்த்தரைத்து தயாரிக்கப்படுவது வெள்ளரி ஜூஸ். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் நீர்ச்சத்தும் தரக்கூடியது.
* மங்குஸ்தான் பழத்துடன் வெல்லமும் ஐஸ் வாட்டரும் சேர்த்தரைத்து தயாரிக்கப்படுவது கோகம் (Kokum) ஜூஸ். இது தாகத்தைத் தணிக்கவும் நீரிழப்பைத் தடுக்கவும் உதவும். இதிலுள்ள நார்ச்சத்து சீரான செரிமானம் தந்து எடை இழப்பிற்கு உதவுகிறது.
கொளுத்தும் கோடை வெயிலை எளிய இயற்கை முறைகளில் வெல்வோம்!