இனிப்புப் பிரியர்களே, இது உங்களுக்கான பதிவு... ஆம், நம் உடலுக்கு சக்தி கொடுத்து, நாவின் சுவை அரும்புகளை நர்த்தனமாட வைத்து சுகானுபவம் கொள்ளச் செய்யும் லட்டு / அல்வா போன்ற சில இனிப்பு வகைகள், குளிர் காலங்களில் நம் உடல் உஷ்ணத்தை சரியான நிலையில் பராமரிக்கவும் உதவும் என்பது கூடுதல் தகவல்! அவ்வாறான எட்டு வகை இனிப்புகளின் பட்டியலை கீழே காண்போம்.
கருப்பு அல்லது வெள்ளை எள்ளுடன் வெல்லம், தேங்காய் துருவல், வேர்க்கடலை பருப்பு சேர்த்து தயாரிக்கப்படும் லட்டானது குளிர் கால பண்டிகைகளின்போது உண்கையில் சுவையும் சக்தியும் அளிப்பதுடன் உடலுக்கு வெது வெதுப்பையும் தர வல்லது.
பின்னி (Pinni) எனப்படும் பஞ்சாபி இனிப்பானது, முழு கோதுமை மாவுடன் சுத்தமான நெய், அதிகளவு நட்ஸ், வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படுவது. அதிக சக்தி அளிப்பதுடன் குளிரை குறைக்கும் தன்மையும் கொண்டது.
அடடியா பாக் (Adadiya Pak) எனப்படும் குஜராத் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற லட்டானது கருப்பு உளுந்து மாவு, நெய், உண்ணக்கூடிய ஒரு வகை பிசின், நாட்டு சர்க்கரை ஆகியவற்றால் தயாரிக்கப்படுவது. அதிக சத்துக்களுடன் தேவையான சூட்டையும் உடலுக்குத் தருவது.
தென்னிந்திய இனிப்பான மைசூர் பாக், கடலை மாவு, சர்க்கரை, நெய் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு, அதிக சக்தி தருவதுடன் சிறந்த குளிர் கால உணவாகவும் திகழ்கிறது.
பாதம், முந்திரி, பிஸ்தா, பூசணி விதை போன்ற நட்ஸ் மற்றும் பேரீச்சம்பழம் சேர்த்து தயாரிக்கப்படும் ட்ரை ஃபுரூட் லட்டானது உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச் சத்துக்களையும் சக்தியையும் தரக்கூடியது. குளிர் காலத்தில் உண்பதற்கு ஏற்றது.
அகாசியா (Acacia) எனப்படும் ஒரு வகை மரத்தின் உண்ணக்கூடிய பிசின், கோதுமை மாவு, வெல்லம், நட்ஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் டிங்க் லட்டு (Dink Laddoo) முக்கிய ஊட்டச் சத்துக்களை தருவதுடன் உடலுக்குத் தேவையான உஷ்ணத்தையும் உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டது.
ராகி மாவு, வெல்லம், ஏலக்காய் தூள், சிறிது நெய் சேர்த்து கிளறப்படும் இந்த அல்வாவானது ஒரு ஸ்பூன் உண்டவுடன் உடலுக்கு உஷ்ணத்தை உடனடியாக உற்பத்தி செய்து தருவதுடன், ஆரோக்கிய ஊட்டச் சத்துக்களையும் அள்ளித் தரக் கூடிய அருமையான டெஸர்ட்.
கம்பு (Pearl Millet) மாவு, பேரீச்சம்பழம், வெல்லம், நட்ஸ், சிறிது நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த கம்பு - பேரீச்சம்பழ லட்டு அதிகளவு ஊட்டச்சத்து கொடுத்து ஆரோக்கியம் நிறைந்த குளிர் கால உணவாகத் திகழ்கிறது.
மழை, பனி காலங்களில் இவ்வாறான இனிப்புகளையும் அளவோடு உணவுகளுடன் சேர்த்து உண்டு ஆரோக்கியம் காப்போம்!