நம்மில் பலருக்கு காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது கடினமாக இருக்கும். வேலை, குடும்பம் மற்றும் பிற பொறுப்புகளுக்கு இடையே காலையில் உடற்பயிற்சி செய்வது சவாலானது. ஆனால், இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். காலை நேரத்தை விட மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது பல நன்மைகளைத் தரும் என சொல்லப்படுகிறது. இந்த பதிவில் மாலை நேர உடற்பயிற்சியின் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
மாலை நேர உடற்பயிற்சியின் நன்மைகள்:
பொதுவாகவே மாலை நேரத்தில் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் இது தசைகளை தளர்த்தவும் உங்கள் செயல் திறனை அதிகரிக்கவும் உதவும்.
ஒரு நாள் முழுவதும் வேலை செய்த பிறகு மாலை நேர உடற்பயிற்சி மன அழுத்தத்தை குறைத்து, உங்களை நிம்மதியாக உணர வைக்கும்.
சில ஆய்வுகள் மாலை நேர உடற்பயிற்சியானது கொழுப்பை அதிகமாக எரிக்க உதவும் என கூறுகின்றன.
தூங்குவதற்கு சில மணி நேரம் முன்பு செய்யப்படும் உடற்பயிற்சியானது நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.
மாலை நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது உங்களைப் பிறருடன் ஒன்றி பழக வைத்து, ஊக்கம் கொடுக்கும் விதமாக அமையும்.
பலருக்கு மாலை நேரம் என்பது அதிக பணிச்சுமை இல்லாத சிறப்பான நேரமாகும். காலை நேரத்தைப் போல மாலையில் அழுத்தமான சூழல் எதுவும் இருக்காது.
மாலை நேர உடற்பயிற்சி செய்வதற்கான சில குறிப்புகள்:
தூங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் உடற்பயிற்சி செய்யுங்கள் இது உங்களது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.
முதலில் லேசான உடற்பயிற்சியுடன் தொடங்கி படிப்படியாக அதன் தீவிரத்தை அதிகரிக்கவும். குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்போது போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும் பின்னும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும். உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற தளர்வான மற்றும் காற்று ஊடுருவக்கூடிய ஆடைகளை அணியவும்.
உடற்பயிற்சி செய்யும் போது பாதுகாப்பான இடத்தில் உடற்பயிற்சி செய்யுங்கள், அத்துடன் உடற்பயிற்சி செய்வதற்கான எல்லா வழிமுறைகளையும் முறையாகப் பின்பற்றி உடற்பயிற்சி செய்வது நல்லது.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி மாலை நேரத்தில் நீங்கள் உடற்பயிற்சி செய்து வந்தால், உங்களது உடல் எடையை நீங்கள் விரைவாக குறைக்க முடியும். அதேநேரம் உடற்பயிற்சி செய்வதன் ஆரோக்கிய நன்மைகளையும் நீங்கள் அடையலாம்.