
நம் உடல் நாம் உண்ணும் உணவைச் செரித்து, அதிலிருந்து சத்துக்களைப் பிரித்தெடுத்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் சக்தியை அளிக்கிறது. இந்தச் செரிமானச் செயல்முறை ஒரு சிக்கலான தொடர் நிகழ்வு. நாம் உணவை வாயில் வைக்கும் நொடியில் இருந்து, அது கழிவாக வெளியேறும் வரை பல்வேறு நிலைகளில் நடைபெறுகிறது. ஆனால், நாம் சாப்பிடும் உணவு எவ்வளவு நேரத்தில் செரிமானம் ஆகும் என்று எப்போதாவது யோசித்ததுண்டா?
செரிமானத்தின் முதல் படி, நாம் உணவை மென்று விழுங்குவது. பற்கள் உணவைச் சிறிய துகள்களாக உடைக்கின்றன. உமிழ்நீர் உணவை ஈரப்படுத்தி, உணவுக்குழாய் வழியாகச் செல்ல உதவுகிறது. உணவுக்குழாயின் கீழே உள்ள ஒரு தசை, உணவை வயிற்றுக்குள் அனுப்புகிறது. வயிற்றில், உணவு செரிமானச் சாறுகளுடன் கலந்து, மேலும் உடைக்கப்படுகிறது. வயிற்றுச் சுவரில் உள்ள சுரப்பிகள் நொதிகள் மற்றும் அமிலத்தை உற்பத்தி செய்து, செரிமானத்திற்கு உதவுகின்றன.
அடுத்ததாக, சிறுகுடலில், சத்துக்கள் மற்றும் நீர் இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகின்றன. மீதமுள்ள கழிவுகள் பெருங்குடலுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு நீர் உறிஞ்சப்பட்டு, கழிவுகள் மலமாக மாற்றப்படுகின்றன. இந்த மலம் மலக்குடலில் சேமிக்கப்பட்டு, பின்னர் வெளியேற்றப்படுகிறது.
உணவு செரிமானம் ஆகும் நேரம் பல காரணிகளைப் பொறுத்தது. உணவின் வகை, அளவு, உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் போன்ற காரணிகள் செரிமான நேரத்தை பாதிக்கின்றன. பொதுவாக, உணவு செரிமானம் ஆக 24 முதல் 72 மணி நேரம் வரை ஆகலாம்.
எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் செரிமானம் ஆகும்?
எளிதில் செரிமானம் ஆகும் உணவுகள்: பழங்கள், காய்கறிகள், வேகவைத்த தானியங்கள் போன்றவை எளிதில் செரிமானம் ஆகும். பழங்கள் சுமார் 30-40 நிமிடங்களிலும், காய்கறிகள் 45-50 நிமிடங்களிலும், தானியங்கள் 90 நிமிடங்களிலும் செரிமானம் அடைகின்றன.
மிதமான நேரத்தில் செரிமானம் ஆகும் உணவுகள்: பால் பொருட்கள், பருப்பு வகைகள், மீன் போன்றவை மிதமான நேரத்தில் செரிமானம் ஆகும். பால் பொருட்கள் சுமார் 2 மணி நேரத்திலும், பருப்பு வகைகள் 2 மணி நேரத்திற்கும் மேலாகவும், மீன் 30-60 நிமிடங்களிலும் செரிமானம் அடைகின்றன.
அதிக நேரம் எடுக்கும் உணவுகள்: இறைச்சி, கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்றவை அதிக நேரம் எடுக்கும். இறைச்சி 2-4 மணி நேரங்களிலும், கொழுப்பு நிறைந்த உணவுகள் இன்னும் அதிக நேரத்திலும் செரிமானம் அடைகின்றன.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்தை துரிதப்படுத்தும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும். ஏனெனில், அவற்றில் உள்ள ரசாயனங்களை உடைப்பது உடலுக்குக் கடினம்.
வயது மற்றும் உடலின் வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்தும் செரிமான நேரம் மாறுபடும். அதிக வளர்சிதை மாற்றம் கொண்டவர்களுக்கு உணவு வேகமாக செரிமானம் ஆகும். அதேசமயம், குறைந்த வளர்சிதை மாற்றம் கொண்டவர்களுக்கு அதிக நேரம் எடுக்கும்.