50 வயதைக் கடந்த பலரும் கண்பார்வை குறைபாடு என்ற பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இது வயதானதால் ஏற்படும் ஒரு இயற்கையான மாற்றம் என்றாலும், சரியான கவனிப்புடன் இதன் தாக்கத்தை குறைக்க முடியும். இந்தப் பதிவில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் பொதுவான கண் பிரச்சனைகள் மற்றும் அவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ஒருவருக்கு வயதாவதால் உடலின் பல உறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படுவது போலவே கண்களிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. கண்ணில் லென்ஸ் விரைப்படைந்து, ஒளியை தெளிவாக பட வைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதன் விளைவாக அருகில் உள்ள பொருட்களைப் பார்க்கும்போது தெளிவாகத் தெரியாமல், கண் கலங்கி இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதுவே, வயது தொடர்பான கண்பார்வை குறைபாடு (Presbyopia) என்று அழைக்கப்படுகிறது.
50 வயதைக் கடந்தவர்களுக்கு ஏற்படும் கண் பிரச்சனைகள்:
Presbyopia: இது அருகில் உள்ள பொருட்களை தெளிவாக பார்ப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும் ஒரு நோயாகும்.
Cataract: கண்ணின் லென்ஸ் மேகமூட்டமாக மாறுவதால் பார்வை மங்கி ஒளிச்சிதறல் ஏற்படும்.
Glaucoma: கண்ணில் உள்ள அழுத்தம் அதிகரிப்பதால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு படிப்படியாக பார்வை இழப்பு ஏற்படும்.
Macular Degeneration: கண்ணின் மையப்பகுதியில் உள்ள மஞ்சள் புள்ளி பகுதி பாதிக்கப்படுவதால் நேராக பார்க்கும் பொருட்களின் மையப்பகுதி மங்களமாகத் தெரியும்.
தடுப்பு முறைகள்:
நீங்கள் ஆரோக்கியமான உணவு சாப்பிட்டாலே உடலில் எந்த பாதிப்புகளும் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். பச்சை காய்கறிகள், பழங்கள், மீன் போன்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உண்ணுங்கள். போதுமான தூக்கம் உங்கள் கண்களுக்கு ஓய்வு அளித்து கண் சோர்வைத் தடுக்கும்.
வெளியே செல்லும்போது சூரிய ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்க சன் கிளாஸ் அணியுங்கள். அல்லது ஒரு குடையாவது எடுத்துச் செல்லுங்கள். கணினியில் தொடர்ந்து வேலை செய்யும்போது அவ்வப்போது இடைவெளி விட்டு வேலை பார்க்கவும்.
ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கண் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது நல்லது.
50 வயதுக்கு மேல் கண் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது என்றாலும் சரியான கவனிப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பின்பற்றி இதனை நாம் கட்டுப்படுத்த முடியும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, சரியான உணவு, தொடர்ச்சியான கண் பரிசோதனை போன்றவை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.