நீரிழிவு நோய் என்பது உலக அளவில் பரவலாக அதிகரித்து வரும் ஒரு நோய். இது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹார்மோன், இன்சுலின் செயல்பாட்டில் குறைபாட்டை ஏற்படுத்துவதால் உண்டாகிறது. காலப்போக்கில் நீரிழிவு நோயின் தாக்கமானது, கண்கள், சிறுநீரகம், நரம்புகள் மற்றும் இதயம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும். நீரிழிவு நோயின் மிக முக்கியமான பாதிப்புகளில் ஒன்று கண் விழித்திரையில் ஏற்படும் பாதிப்பாகும். இந்தப் பதிவில் நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு கண்களில் ஏற்படும் அறிகுறிகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
கண் அறிகுறிகள்:
கண் மங்கலாகத் தெரிவது, நீரிழிவு நோயின் மிகவும் பொதுவான அறிகுறியாகவும். இது விழித்திரையின் ரத்த நாளங்களுக்கு சேதம் ஏற்படுவதால் உண்டாகிறது.
பார்வையில் கருப்பு அல்லது சாம்பல் புள்ளிகள், மிதக்கும் அல்லது ஒளிரும் பிம்பங்கள் போன்ற திடீர் பார்வை மாற்றங்கள், நீரிழிவு நோயின் தொடக்கநிலை அறிகுறிகளாகும்.
சில நபர்களுக்கு மாலையில் பார்வை மிக மோசமாக மாறிவிடும். இத்துடன் கண்களில் வலி, எரிச்சல் போன்ற அழற்சி பாதிப்புகளும் ஏற்படலாம். கண்கள் சிவந்து அதிக எரிச்சலை உண்டாக்கும். கண்களில் உள்ள தசைகள் சரியாக வேலை செய்யாததால், பார்க்கும் விஷயங்கள் இரண்டு இரண்டாகத் தெரியலாம்.
இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பார்வைக் கோளாறுக்கான காரணத்தை கண்டறிவது நல்லது. நீரிழிவு நோய் உள்ள அனைவருமே ஆண்டுதோறும் விரிவான கண் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் முறையான கண் சிகிச்சை மேற்கொண்டு கண்களுக்கு ஏற்படும் அபாயத்தைக் குறைத்து, பார்வை இழப்பைத் தடுக்கலாம்.
நீரிழிவு நோய் என்பது ஒரு சாதாரண நோய் போல பலரால் பார்க்கப்பட்டாலும், அது கொஞ்சம் கொஞ்சமாக உங்களது உடல் நிலையை மோசமாக்கக்கூடும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இதை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டால், காலப்போக்கில் உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்து, உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும். நீரிழிவு நோயால் கண்ணுக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க, நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை கண்காணித்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது முக்கியம்.
இத்தகைய முயற்சிகளை நீங்கள் எடுப்பது மூலமாக நீரிழிவு நோயின் தாக்கத்தைக் குறைத்து, என்றும் மகிழ்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கலாம்.