கண்களின் கூடுதல் அழகுக்கு மை பயன்படுத்துவது என்பது அன்று முதல் இன்று வரை பெண்களின் வழக்கம். அன்று விளக்கெண்ணெய் , தேங்காய் சிரட்டை ஆகியவற்றை மூலப்பொருட்களாகக் கொண்டு தயார் செய்யப்பட்ட மை கண்களுக்குக் குளிர்ச்சியைத் தந்தது. ஆனால், இன்று பல கெமிக்கல்கள் சேர்த்து செய்யப்படும் பல வகையான கண் மைகள் கண்களின் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கின்றன. கண் மைகள் தரும் ஆரோக்கிய பாதிப்புகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
பெண்களின் கண்கள் மென்மையானவை மட்டுமல்ல, முக்கியமானதும் என்பதால் எச்சரிக்கையாக அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு.
கண்ணின் விளிம்புகளில் லாக்ரீமல் சுரப்பிகள், மெய்போமியன் சுரப்பிகள் உள்ளன. அழுகை, மகிழ்ச்சி போன்ற சமயத்தில் கண்ணீர் சுரப்பதற்கும், எண்ணெய் போன்ற திரவம் சுரந்து கண்கள் உலர்ந்து போகாமல் இருப்பதைத் தவிர்ப்பதற்கும் இவையே காரணம் என்கிறது கண்கள் குறித்த ஆய்வு.
சில ஒப்பனை சாதனங்களில், குறிப்பாக கண் மைகளைத் தயாரிக்கும்போது குறிப்பிட்ட அளவில் ஈயம் கலக்கப்படுவதுடன் அவை அடர்த்தியான கருமையுடன் இருக்க கார்பன் பிளாக் மற்றும் செயற்கை சாயங்கள் (synthetic dyes) சேர்க்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
மேலும், கண் மை, ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷாடோ போன்ற ஒப்பனை சாதனங்கள் பல ஆண்டுகளுக்குக் கெடாமல் இருப்பதற்காக ஃபார்மால்டிஹைட் (Formaldehyde) போன்ற பொருட்கள் அதில் சேர்க்கப்படுவதாகவும் தூசி பட்டாலே சிவக்கும் தன்மை கொண்ட மென்மையான கண்களில் இதுபோன்ற வேதிப் பொருட்கள் அடங்கிய பொருள்களை தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது கண்களில் எரிச்சல் கட்டி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கண் மருத்துவம் எச்சரிக்கிறது.
கண்களின் வாட்டர்லைன் எனப்படும் இமைகளில் மை போன்ற பொருளை இடுவதால், அங்குள்ள நுண்ணிய துளைகளில் (pores) அடைப்பு ஏற்பட்டு கண்ணில் சுரக்கப்படும் திரவங்கள் வெளியேற வழி இல்லாமல் உள்ளேயே கட்டி போல உருவாகக்கூடும். இந்த பாதிப்பை சலாசியன் (chalazion) என்று குறிப்பிடுகின்றனர்.
சலாசியன் என்பது அதிகம் பாதிப்பு தராத நீர்க்கட்டி. ஆனால், திரவம் அதிகமாக சேரும் சில நேரங்களில் எரிச்சல், வீக்கம் மற்றும் சிவப்பு நிறக் கட்டியாக அது மாறி கண்களை பாதிக்கும் நிலை ஏற்படலாம். சலாசியன் எனும் கண் பாதிப்பு ஒரு தொற்று அல்ல. இருப்பினும், இதனால் சில நேரங்களில் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை.
கண் வீக்கம், எரிச்சல் போன்றவை இருந்தால் சுத்தமான விரலால் அந்தப் பகுதியை மெதுவாக மசாஜ் செய்யலாம். இது சுரப்பியைத் தானே சுத்தம் செய்ய உதவும். வெதுவெதுப்பான நீரினால் கண்களை மென்மையாக ஒத்தடம் தரலாம். தடைப்பட்ட எண்ணெய் சுரப்பியைத் திறந்து வடிகட்டுவதற்கு ஒரு சூடான ஒத்தடம் உதவும்.
இந்த பாதிப்பை தடுக்க முடிந்த வரை ஒப்பனை சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் கண் மை பயன்படுத்தியதும் கண்ணிமை, இமையிலுள்ள முடி போன்ற எல்லா பகுதிகளிலும் சுத்தமான நீரினால் அவற்றை முழுமையாக அகற்ற வேண்டும். முக்கியமாக, இது போன்ற கண் பாதிப்பை கண்டால் சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக நல்ல கண் மருத்துவரை நாடுவதே பாதுகாப்பான சிறந்த வழி.