
குழந்தைகள் முதல் குமரிகள் வரை கண்களுக்கு மையிடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். கண்ணில் மையிடுவது கண்களை அழகாக காட்டுகிறது. தற்போது கண்களை அழகாக்க, ஐலைனர், மஸ்காரா போன்றவற்றை பெண்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், இதில் அழகு மட்டுமில்லை ஆபத்தும் இருக்கிறது. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
கண் மையை பல ஆண்டுகளாக இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரித்து பயன்படுத்தி வந்தனர். இயற்கையான பொருட்களை பயன்படுத்தியவரை எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் தற்போது பயன்படுத்தப்படும் மஸ்காரா, ஐலைனர் போன்றவற்றில் ரசாயனம் கலந்திருக்கிறது. இவை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க பார்மால்டிஹைட் சேர்க்கப்பட்டிருப்பதால் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
கண் இமை விளிம்பில் இதுப்போன்ற ரசாயன பொருட்களை பயன்படுத்தும் போது அங்கிருக்கும் நுண்ணிய துளைகளில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் கண்களில் சுரக்கப்படும் திரவம் வெளியே வரமுடியாமல் தடைப்படுவதால் ‘கேலேசியன்’ என்னும் கட்டி ஏற்படுகிறது. சில சமயங்களில் இது புற்றுநோய் கட்டியாகவும் மாறும் வாய்ப்பு உள்ளது.
மேலும் கண்களின் விளிம்பில் லாக்ரீமல் சுரப்பிகள் இருக்கின்றன. இது நம் கண்களில் கண்ணீர் சுரக்கச் செய்ய உதவுகிறது. இதனால்தான் கண்கள் உலர்ந்துப் போகாமல் இருக்கின்றன. இயற்கையாக தயாரிக்கப்படும் கண் மைகளால் இந்த சுரப்பிகளில் பாதிப்பு ஏற்படாது. சில கண் மைகளில் அடர்த்தியான கருப்பு நிறத்திற்காக கார்பன் பிளாக், கண் மை கெட்டுப் போகாமல் இருக்க பார்மால்டிஹைட் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்துவதால் இது கண்களில் உள்ள சுரப்பிகளை பாதிக்கிறது.
அதுமட்டுமில்லாமல் ‘கார்னியல் அல்சர்’ என்ற கருவிழிப் புண்களை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
எனவே, அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தும் போது முடிந்த வரை இயற்கையான மற்றும் ரசாயனம் கலக்கப்படாத பொருட்களாக பார்த்து பயன்படுத்துவது அழகு மற்றும் ஆரோக்கியம் இரண்டையுமே மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
குழந்தைகளுக்கு கண்ணில் மேக்கப் போடுவதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு அலர்ஜி காரணமாக கண்களில் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
கண்களுக்கு மேக்கப் போடும் பெண்கள் தூங்குவதற்கு முன்பு மேக்கப்பை சோப்பு போட்டு கழுவி விடுவது நல்லது.
கண்களுக்கு மேக்கப் போட பயன்படுத்தும் பொருட்களில் கார்பன் பிளாக் என்ற வேதிப்பொருள் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.
கான்டாக்ட் லென்ஸ் பயன்டுத்துபவர்கள் கண்களுக்கு மேக்கப் போடுவதை தவிர்ப்பது நல்லது.