
உலகை ரசிக்க இறைவன் கொடுத்த ஒரு அற்புதமான வரம் நம் கண்கள். ஆனால் நவீன வாழ்க்கை முறையிலும், மின்னணு சாதனங்களின் அதீத பயன்பாட்டாலும், இந்தப் பார்வைப் பொக்கிஷத்தை நாம் கவனக்குறைவால் இழந்து வருகிறோம். ஒரு காலத்தில் கண்ணாடி அணிவது முதுமையின் அடையாளமாகவும், சில சமயங்களில் சங்கடமாகவும் பார்க்கப்பட்டது. ஆனால் இன்றோ, இள வயதிலேயே ஏன் குழந்தைப் பருவத்திலேயே பலர் கண்ணாடி அணிவது சாதாரணமாகிவிட்டது, ஒருவித நாகரிகமாகவும் மாறி வருகிறது.
குறிப்பாக, இன்றைய பள்ளிக் குழந்தைகள் மத்தியில் கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் அபாயகரமாக அதிகரித்து வருகின்றன. ஊட்டச்சத்துக் குறைபாடு ஒருபுறம் இருந்தாலும், கைபேசி, கணினி, தொலைக்காட்சி போன்ற டிஜிட்டல் திரைகளுடனான அதிக நேரம் செலவிடுவது இதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது.
குழந்தைகள் அடம் பிடிக்கும்போது அவர்களைச் சமாதானப்படுத்த பெற்றோர்கள் கைகளில் கைபேசியைக் கொடுப்பது நாளடைவில் அது இல்லையென்றால் அவர்களுக்குச் சோறு கூட இறங்காத, தூக்கம் வராத, விளையாடப் பிடிக்காத ஒரு நிலையை உருவாக்கி விடுகிறது.
தொடர்ந்து திரையை உற்றுப் பார்ப்பதால், குழந்தைகளின் தூரத்துப் பார்வை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. நாளடைவில் இது மங்கலான பார்வை, கிட்டப்பார்வை போன்ற குறைபாடுகளுக்கு வழிவகுத்து, சிறு வயதிலேயே கண்ணாடியை அணிய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. இது ஒருபுறம் இருக்க, இந்தத் திரை பயன்பாடு குழந்தைப் பருவ உடல் பருமனுக்கும் வழிவகுத்து, இருதய நோய், நீரிழிவு போன்ற பிற தீவிர நோய்களுக்கும் அடித்தளமிடுகிறது.
இந்நிலையில், இந்திய கண் மருத்துவர்கள் சங்கத்தின் (ACOIN) நிபுணர்கள் ஒரு அதிர்ச்சிகரமான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். தற்போதுள்ள நிலை தொடர்ந்தால், 2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பள்ளி செல்லும் குழந்தைகளில் சுமார் 50 சதவிகிதம் பேர் கிட்டப்பார்வையால் பாதிக்கப்படக்கூடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏற்கனவே, இந்தியப் பள்ளி மாணவர்களில் சுமார் 23% பேர் கிட்டப்பார்வையுடன் போராடி வருகின்றனர். டிஜிட்டல் சாதனங்களின் பெருக்கம் மற்றும் வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடும் நேரம் குறைந்தது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களே இந்த அதிகரிப்புக்குக் காரணம் எனக் கண் மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் ஆன்லைன் வகுப்புகளால் திரை நேரம் அதிகரித்த பிறகு, இந்த பாதிப்புகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
கிட்டப்பார்வை என்பது அருகில் உள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்க முடிந்தாலும், தொலைவில் உள்ள பொருள்கள் மங்கலாகத் தெரிவதைக் குறிக்கும் ஒரு குறைபாடு. இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க, குழந்தைகள் அதிகப்படியான திரை நேரத்தைத் தவிர்ப்பதன் அவசியம், போதுமான உறக்கம், மற்றும் தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது வெளியில் சென்று விளையாடுவது போன்ற எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.