
மனிதர்களுக்குப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு அற்புதம் தான் கண்ணீர் (Tears). இது வெறும் மன வருத்தத்தை வெளிப்படுத்தும் செயல்பாடு மட்டுமல்ல, அறிவியல் பூர்வமாக இதற்குப் பின்னால் பல முக்கிய காரணங்கள் உள்ளன.
நாம் மன உளைச்சலில் இருக்கும்போது, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை வெளியேற்ற கண்ணீர் உதவுகிறது. இது ஒருவகையில் நம் உடலின் மன சுத்திகரிப்பு செயல்முறை. நாம் சோகமான திரைப்படங்கள், தொடர்கள் அல்லது நிஜ வாழ்க்கையில் பிறரின் துயரத்தைக் காணும்போது கண்ணீர் வருகிறது. இதன் மூலம், நம் துயரத்தை அருகில் இருப்பவர்களுக்கு வெளிப்படுத்துவதுடன், நம் மனக்காயங்களையும் ஆற்றிக்கொள்கிறோம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கண்ணீரில் உள்ள ரசாயனங்கள் மற்றும் அடுக்குகள்:
கண்ணீரில் உப்புகள் ஆன்டிபாடிகள், ஆன்டிபாக்டீரியல் என்சைம்கள் எலக்ட்ரோலைட்டுகள் ஆகியவை உள்ளன. கண்ணீர் லிப்பிட், அக்வஸ் மற்றும் சளி என்ற மூன்று அடுக்குகளால் ஆனது. மொத்தக் கண்ணீரையும் கண்ணில் கட்டி வைத்திருக்கும் உள் சளிப்படல அடுக்கு.
கண்ணை நீரேற்றமாக வைத்திருக்கவும், பாக்டீரியாவை விரட்டவும் மற்றும் கருவிழியைப் பாதுகாக்கவும் நீர் நிறைந்த நடுத்தர அடுக்கு (தடிமனான அடுக்கு), கண்ணீரின் மேற்பரப்பை கண்ணுக்குத் தெரியும்படி மென்மையாக வைத்திருக்கவும், மற்ற அடுக்குகள் ஆவியாகாமல் தடுக்கவும் வெளிப்புற எண்ணெய் அடுக்கு என கண்ணீரில் மூன்று அடுக்குகள் செயல்படுகின்றன.
கண்ணீரின் மூன்று வகைகள்:
கண்ணீரில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பணியைச் செய்கின்றன.
அடித்தள கண்ணீர் (Basal tears): கண்களைப் பாதுகாக்க, ஈரப்பதத்துடன் வைத்திருக்க, மற்றும் ஊட்டமளிக்க இந்த கண்ணீர் எப்போதும் கண்களில் இருக்கும். இது நம் பார்வைக்குத் தெளிவையும், பார்க்கும் பொருளை சரியாகப் பார்க்கவும் உதவுகிறது. இந்தக் கண்ணீரில் ஆக்சிஜன் மற்றும் நியூட்ரியன்ட்ஸ் உள்ளன.
எரிச்சல்களை நீக்கும் கண்ணீர் (Reflex tears): வெங்காயம் வெட்டும்போது, தூசி அல்லது புகை கண்ணில் படும்போது இந்த வகை கண்ணீர் சுரக்கிறது. இது ஒரு பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டு, எரிச்சலூட்டும் பொருட்களை வெளியேற்றுகிறது. இதில் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகள் உள்ளன.
உணர்ச்சிக் கண்ணீர் (Emotional tears): மகிழ்ச்சி, சோகம், பயம் போன்ற உணர்ச்சிவசப்பட்ட தருணங்களில் இந்த கண்ணீர் வருகிறது. கடும் வலி அல்லது மன உளைச்சலின்போதும்கூட இது சுரக்கிறது. இந்த உணர்ச்சிக் கண்ணீர் மன அழுத்த ஹார்மோன்களின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது.
கண்ணீரின் நன்மைகள்:
கண்ணீர் (Tears) விடுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன:
உறவுகளை மேம்படுத்துகிறது: உணர்ச்சிபூர்வமான கண்ணீர் விடுவது நம் உணர்வுகளைப் பிறரிடம் வெளிப்படுத்த உதவுகிறது, இதன் மூலம் உறவுகள் வலுப்பெறுகின்றன.
மன நிம்மதி: அழுவதன் மூலம் மனக் காயங்கள் ஆற்றப்படுகின்றன, கோபம் தணிகிறது, மேலும் மோசமான சூழ்நிலைகளைச் சமாளிக்க உதவுகிறது.
பரிதாபத்தைப் பெறுகிறது: மற்றவர்களின் அனுதாபத்தைப் பெறவும், நமது மனநிலையை வெளிப்படுத்தவும் கண்ணீர் ஒரு சிறந்த கருவியாகச் செயல்படுகிறது.