
நீங்கள் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் காலையில் வெறும் வயிற்றில் புல்லட் காபியை எடுத்துக் கொள்ளுங்க. இது பசியை நன்றாக குறைத்து உடல் எடையை சீராக்க உதவும் புது டிரெண்டாகும். இதைப்பற்றி விரிவாக இந்த பதிவில் காண்போம்.
பொதுவாகவே Paleo அல்லது Low carb diet இருப்பவர்கள் மத்தியில் புல்லட் காபி மிகவும் பிரபலமாகும். சாதாரண காபியில் பால், சர்க்கரை, காபி தூள் போட்டு குடிப்போம். கிட்டத்தட்ட ஒரு காபியில் சுலபமாக 150 கலோரிஸ் வந்துவிடும். அது மட்டுமில்லாமல் உணவுகளையும் அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது உடல் பருமன் அதிகரிக்கும்.
புல்லட் காபியில் பால் சேர்க்காமல் சுடுத்தண்ணீரில் காபி தூள் சேர்த்து சர்க்கரை சேர்க்காமல் அதில் 2 தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து கலக்கி காலையில் குடித்து விடுவார்கள். இது வயிறு நிறைவாக இருக்கும் உணர்வைத் தரும்.
இதை எடுத்துக் கொள்வதால் ஒருவேளை உணவே தேவைப்படாது. இதன் மூலமாக கலோரிகளையும், மாவுச்சத்துக்களையும் சுலபமாக குறைக்க முடியும். உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது நன்றாக உதவும்.
இதை உடல் எடை குறைக்க எல்லோருமே எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்டால், familial hyper cholesterolemia என்கிற LDL கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கக்கூடிய பிரச்னை இருந்தால் இதை தவிர்த்துக் கொள்வது நல்லது. இதயம் சம்மந்தமான பிரச்னை உள்ளவர்களுக்கு இது சில சமயம் ஒத்துவராமல் போகலாம். அவர்களும் இதை தவிர்ப்பது நல்லது.
மற்றப்படி உடல் எடைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது நல்ல ஆப்சனாகவே கருதப்படுகிறது. கலோரிகள் மற்றும் மாவுச்சத்து குறைவாகவும், காய்கறிகள், புரதம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் போது இதை எடுத்துக் கொண்டால் கட்டாயம் உடல் நலத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.
புல்லட் காபியை அருந்துவதால் உடலில் சக்தி அதிகரிக்கிறது, நல்ல கூர்மையாக கவனம் செலுத்த உதவுகிறது, கலோரிகளை எரித்து உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் அதிக கொழுப்பு இருப்பதால், தினமும் எடுத்துக்கொள்ள உகந்ததில்லை. இதை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதே சிறந்தது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)