
மயக்கம் என்பது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால், நினைவை இழந்து கீழே விழுவதாகும். இதற்கு தண்ணீர் தெளிப்பது மயக்கத்தை குணப்படுத்தாது. இது அவரை மேலும் மோசமாக்கும். அவரை பதட்டமடைய செய்யும். காரணம் மயக்கம் அடைந்தவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். எனவே தண்ணீர் தெளிப்பது சுவாசப் பாதையில் சிக்கல்களை ஏற்படுத்தும். மயக்கம் அடைந்தவரை எழுப்புவதற்கு முயற்சிப்பதற்கு பதிலாக உடனடியாக மருத்துவ உதவிக்கு அருகில் உள்ள மருத்துவரை நாடுவதுதான் சிறப்பு.
மயக்கம் வருவதற்கான காரணங்கள்:
மயக்கம், தலைசுற்றல், சுயநினைவில்லாமல் போவது போன்ற அறிகுறிகள் சீரியசான பிரச்சினையின் அறிகுறிகளாகக் கூட இருக்கலாம்.
ரத்த சர்க்கரை அளவு குறைந்தால் மயங்கி விழலாம். நீரிழிவு நோயாளிகள் அல்லது நீண்ட நேரம் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்கும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து மயக்கம் ஏற்படலாம்.
கழுத்தெலும்பு தேய்மானம் காரணமாகவோ அல்லது உள் காதுக்குள் ஏற்படும் பிரச்சனை காரணமாக வரும் வெர்டிகோ ப்ராப்ளம் காரணமாகவும் மயக்கம் ஏற்படலாம்.
மூளைக்கு போகக் கூடிய ரத்த ஓட்டம் குறையும் போதோ, ஆக்சிஜன் அளவு குறையும் பொழுதோ மூளைக்கு தகவல் சென்று உடனே மயக்கம் ஏற்படலாம்.
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திடீர் மயக்கம் வர வாய்ப்புகள் அதிகம்.
திடீரென ரத்த அழுத்தம் அதிகமானாலும் மயக்கம் வரலாம். அதாவது சராசரியை விட அதிகமாகும் பொழுது மூளையிலுள்ள ரத்தக் குழாய்கள் வெடித்து, தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழலாம்.
இதயத்தின் சீரற்ற துடிப்பு அல்லது இதயத்திற்கு ரத்த ஓட்டம் குறைவதால் மயக்கம் வரலாம்.
சில மருந்துகள் பக்க விளைவுகளாக மயக்கத்தை உண்டு பண்ணலாம்.
மயக்கம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி:
மயக்கமடைந்த நபரை காற்றோட்டமான, பாதுகாப்பான இடத்தில் படுக்க வைத்து அவரது கால்களை சற்று உயர்த்தி வைக்கவும். அவரது தலை மற்றும் தோள்களை உயர்த்தி வைக்கவும். சுவாசம் சீராக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். சில நிமிடங்களுக்குள் சுயநினைவு திரும்பவில்லை என்றால் மருத்துவ உதவியை நாடுவது அவசியம். ஆடைகளை தளர்த்தவும். குறிப்பாக கழுத்து மற்றும் மார்பு பகுதியில் ஆடைகளை தளர்த்தி, அவருடைய மூச்சு மற்றும் இதயத்துடிப்பை சரி பார்க்கவும்.
மயக்கம் அடைந்தவர் சுயநினைவுக்கு திரும்பினால் அவரை உட்கார வைத்து சிறிது தண்ணீர் அல்லது பழச்சாறு கொடுக்கலாம். ஆனால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்வது தான் நல்லது. ஏனெனில் சில நேரங்களில் மயக்கம் தீவிரமான உடல் நலப் பிரச்சினையின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.108 ஆம்புலன்ஸ்சை அழைத்து மருத்துவ உதவிக்கு தகவல் தெரிவிக்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)