கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் வெயில் 100 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. மேலும், கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரமும் மே 4ம் தேதி முதல் தொடங்கிவிட்டது. அதன்படி, வெயிலின் தாக்கத்துடன் கோடைக்கால நோய்களான ஹீட் ஸ்ட்ரோக், மாரடைப்பு போன்ற நோய்கள் பாதிக்கக்கூடும்.
குறிப்பாக கோடைகாலத்தில் வெளியே செல்லும்போது உடலில் நீரிழப்பு ஏற்படுவது மிகவும் சாதாரணமானது. இதனால் உடலில் சோர்வு, வியர்வை அதிகரிப்பு, தலைசுற்றல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். சில சமயங்களில் சளி, காய்ச்சல் போன்ற தொற்றுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க, நாம் தினசரி வாழ்க்கையில் சில எளிய மற்றும் பயனுள்ள பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
வீட்டிலிருந்து வெளியே செல்லும் முன் போதுமான அளவில் தண்ணீர் குடித்துவிட்டு செல்ல வேண்டும். உடலில் நீர் இழப்பு ஏற்படாமல் இருக்க இது உதவும். நீண்ட நேரம் வெளியே இருக்க வேண்டியிருந்தால் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லும் பழக்கத்தை உருவாகுக்கள்.
குறிப்பாக, வெயிலில் செல்லும் போது, தலையை பாதுகாக்க ஸ்கார்ப் அல்லது துணியைப் பயன்படுத்துவது சிறந்தது. இது வெப்பத்தால் ஏற்படுத்தும் தலைவலி, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கும்.
வெப்பத்தை அதிகமாக ஈர்க்கும் கருப்பு நிற ஆடைகளைத் தவிர்த்து, வெளிர் நிறம் கொண்ட காட்டன் துணிகளை அணிவது உடலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
வெளியில் செல்லும் போது மரத்தின் நிழல், கட்டிடத்தின் நிழல் போன்ற இடங்களில் நடக்க முயலுங்கள். இது உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவும்.
உடல் நீரேற்றத்துடன் பாதுகாக்க இயற்கையான பானங்களை அதிகமாகக் குடிக்க வேண்டும். பிரஷ் ஜூஸ், இளநீர், மோர், வெள்ளரிக்காய், நீர் போன்றவை உடலிற்கு தேவையான ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நீரிழப்பையும் தடுக்கும்.
வீட்டிற்கு திரும்பியதும் கைகள் மற்றும் முகத்தை சுத்தமாகக் கழுவ வேண்டும். நாள் முழுவதும் வெளியே இருப்பவர்கள் வெப்பம் மற்றும் வியர்வையால் உருவாகும் சோர்வை குறைக்க இரவில் நல்ல குளியல் எடுத்து படுக்கைக்கு சென்றால் சிறந்த தூக்கத்தை பெறலாம்.
மேலும், காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெப்பம் உச்சத்தில் இருக்கும். இந்த நேரத்தில் வெளியே செல்ல வேண்டுமானால், அனைத்து பாதுகாப்பையும் கடைபிடிக்க வேண்டும்.
சத்தான உணவுகளை உண்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பழங்கள், காய்கறிகள், மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை இந்த நேரங்களில் அதிகளவில் எடுத்துகொள்வது தேவை. கோடைகாலங்களில் எண்ணெய், மசாலா அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டில் தயார் செய்த உணவுகளை உண்பது மிகவும் சிறந்தது.
உடலில் சோர்வு, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற மாற்றங்கள் இருந்தால், உடனடியாக ஓய்வெடுத்து தண்ணீர் குடிக்க வேண்டும்.
இவை அனைத்தும் சின்ன சின்ன பழக்கங்கள் போலத் தெரிந்தாலும், நீரிழப்பு போன்ற உடல் பிரச்னைகளை தவிர்க்க மிகுந்த உதவியாக இருக்கும். இன்று முதல் இந்த வழிமுறைகளை கடைபிடிக்கத் தொடங்கினால், வெயிலின் தாக்கத்திலிருந்தும், உடல் சோர்விலிருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.