
சமீப காலமாக குழந்தைகளிடையே உடல் பருமன் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக மாறி வருகிறது. முன்பு வயதானவர்களை மட்டுமே பாதித்து வந்த கொழுப்பு கல்லீரல் நோய், தற்போது குழந்தைகளையும் அதிக அளவில் தாக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
உலக அளவில் குழந்தைகளில் இந்த நோயின் பாதிப்பு 5 முதல் 25% வரை காணப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உடல் பருமன் உள்ள குழந்தைகளில் இது 55 முதல் 80% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 14.4 மில்லியன் பருமனான குழந்தைகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுவதற்கு உடல் பருமன் முக்கிய காரணமாகும். உடல் பருமன் அதிகரிக்கும் போது, கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்கிறது. இது இன்சுலின் எதிர்ப்பு, வளர்சிதை மாற்ற நோய்கள் மற்றும் கல்லீரல் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. ஆரம்ப கட்டத்தில் இந்த நோய்க்கான அறிகுறிகள் பெரும்பாலும் தெரிவதில்லை. சில குழந்தைகளுக்கு அடிவயிற்று வலி, சோர்வு அல்லது வயிற்றின் மேல் வலது புறத்தில் அசௌகரியம் போன்ற உணர்வுகள் ஏற்படலாம்.
சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கொழுப்பு கல்லீரல் நோய் தீவிரமடைந்து சிரோசிஸ் மற்றும் கல்லீரல் செயலிழப்பு போன்ற ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லக்கூடும். மேலும், இந்த நோய் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு அபாயத்தையும் அதிகரிக்கிறது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருந்தால், அது மரபணு அல்லது வளர்சிதை மாற்ற கோளாறாக இருக்க வாய்ப்புள்ளது.
குழந்தைகளுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் வராமல் தடுக்க சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றுவது அவசியம். சமச்சீர் உணவு, போதுமான உடற்பயிற்சி, குறைந்த திரை நேரம், வீட்டு உணவு மற்றும் சரியான தூக்கம் ஆகியவை இந்த நோயை கட்டுப்படுத்த உதவும். சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைத்து, நார்ச்சத்து மற்றும் முழு தானியங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது.
குழந்தைகளுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. சரியான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த நோயின் தீவிரத்தை குறைக்க முடியும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி, குழந்தைகளின் உடல் நலத்தை பாதுகாப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்.