
கொழுப்பு கல்லீரல் நோய் பொதுவாக ஆண், பெண் என இருபாலருக்கும் ஒரே மாதிரியாக ஏற்பட்டாலும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இதன் ஆபத்து காரணிகள் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பெண்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் வருவதற்கான அறிகுறிகள் சில சமயம் இல்லாமல் கூட வரலாம். கொழுப்பு கல்லீரல் நோய் என்பது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு குவியும் பொழுது உருவாவது. அதிகப்படியான கொழுப்பு கல்லீரல் வீக்கத்திற்கு வழிவகுக்கும்.
கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகள்:
வயிற்றினுடைய மேல் வலது பக்கத்தில் லேசான வலி அல்லது அசோகரியத்தை உணர்வது.
சோர்வாக இருப்பதும், குமட்டல், வாந்தி அல்லது பசியின்மை போன்றவை இருப்பது.
எடை இழப்பு மற்றும் மஞ்சள் காமாலை (தோல், கண்களில் மஞ்சள் நிறம் உண்டாவது).
சிறுநீர் மற்றும் மலத்தில் மாற்றம் ஏற்படுவது.
கால்களில் வீக்கம் உண்டாவது போன்றவை fatty liver-ன் அறிகுறிகளாகும்.
காரணங்கள்:
உடல் பருமன் ஒரு முக்கிய காரணமாக அறியப்படுகிறது.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் உயர் கொழுப்பு கல்லீரல் நோயின் ஆபத்தை அதிகரிக்க காரணமாகிறது.
சர்க்கரை நோய் மற்றும் மது அருந்துதலும் முக்கிய காரணமாகிறது.
எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவின் காரணமாகவும் உண்டாகிறது.
தீர்வுகள்:
கொழுப்பு கல்லீரல் நோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் அதனை கட்டுப்படுத்த முடியும். கொழுப்பு கல்லீரல் சிகிச்சைக்கு மருந்து இல்லை. ஆரம்பகால கொழுப்பு கல்லீரலை பொதுவாக உணவில் மாற்றங்கள் செய்வதன் மூலமும், உடற்பயிற்சி மற்றும் நீரிழிவை கட்டுப்படுத்துவதன் மூலமும் குறைக்க முடியும்.
கொழுப்பு கல்லீரலை குறைக்க உதவும் உணவுகள்:
கொட்டைகள், முழு தானியங்கள், ஓட்ஸ், பருப்பு வகைகள், காய்கறிகள், கடல் உணவுகள் ஆகியவை உண்ணத் தகுந்த உணவுகளாக பரிந்துரைக்கப்படுகின்றன. ஆரோக்கியமான வாழ்வு முறையை பராமரிப்பது அவசியம். அதற்கு ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும், உடற்பயிற்சி செய்வதும் கல்லீரல் கொழுப்பை குறைக்க உதவும்.
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளான வெள்ளை அரிசி, உருளைக்கிழங்கு, வெள்ளை ரொட்டி போன்றவை நம் குடலில் இருந்து விரைவாக உறிஞ்சப்பட்டு கல்லீரலில் கொழுப்பாக மாறுகிறது. எனவே இவற்றை தவிர்ப்பது அவசியம்.
உடல் எடையை குறைக்க உடல் செயல்பாடுகளில் ஈடுபடுதல் மற்றும் மருத்துவரின் ஆலோசனைப்படி கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகளை தவிர்ப்பது, மது அருந்துதலை தவிர்ப்பது மிகவும் அவசியம்.
வறுத்த உணவுகள், இறைச்சி, அதிக சர்க்கரை கொண்ட பானங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகள் தெரிந்தால் தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும், பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)