

நம் உடலில் மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெற தாவர விதைகள் சிறந்த முறையில் உதவுகின்றன. அதிலும் அந்த விதைகளை ஊற வைத்து உண்ணும்போது அதிலிருந்து கிடைக்கும் நன்மைகள் பன்மடங்காகின்றன. குறிப்பாக, வெந்தயத்தில் (Fenugreek) உள்ள நார்ச்சத்து மற்றும் 4-ஹைட்ராக்ஸிஸோலூசின் (4-hydroxyisoleucine) என்ற கூட்டுப் பொருளும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரிக்கவும் செய்கின்றன. இப்பதிவில் கூறப்பட்டிருக்கும் நான்கு பொருட்களை வெந்தயத்துடன் சேர்த்து உட்கொள்ளும்போது இயற்கையான முறையில் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த முடியும்.
1. பட்டை (Cinnamon):
ஒரு சிட்டிகை பட்டை பவுடரை வெந்நீரில் கலந்து, ஊற வைத்த வெந்தய விதைகளுடன் உட்கொள்வது இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரிக்க செய்து இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
மேலும், கெட்ட கொழுப்புகள் (LDL-C) மற்றும் ட்ரெய்க்ளிசெரைட்களின் அளவை குறைக்கவும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் பட்டை பவுடர் உதவி புரியும்.
2. நெல்லிக்காய்:
இதிலுள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கணையத்தின் (Pancreas) இயக்கங்களை மேம்படுத்தி, குளுக்கோஸ் மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெற உதவுகின்றன. வெந்தய பவுடரை ஃபிரஷ் நெல்லிக்காய் ஜூஸில் கலந்து அருந்துவது உடலிலுள்ள கொழுப்புகளின் அளவு, அவற்றின் தன்மை, சர்க்கரை மற்றும் கல்லீரலில் உற்பத்தியாகும் CRP (C-reactive protein) ஆகியவை மீது நேர்மறை வினைபுரிந்து உடல் நன்மை பெற உதவும்.
3. ஃபிளாக்ஸ் விதைகள்:
ஃபிளாக்ஸ் விதைகள் மற்றும் வெந்தய விதைளைப் பொடியாக்கி ஸ்மூத்திகளில் சேர்த்து உண்ணலாம். இவை இரண்டிலும் உள்ள நார்ச்சத்து வயிற்றில் அதிக நேரம் தங்கி குளுகோஸ் உடலுக்குள் உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்தும். இதனால் சாப்பாட்டுக்குப் பின் சர்க்கரை அளவு இரத்தத்தில் அதிகரிப்பது தடுக்கப்படும்.
4. மஞ்சள்:
மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற கூட்டுப்பொருள் உடலில் உள்ள வீக்கங்களைக் குறைக்கவும், இன்சுலினின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவி புரியும். குர்க்குமின், இன்சுலின் ரெசிஸ்டன்ஸ், ஹைப்பர் கிளைசீமியா, ஹைப்பர் லிபிடெமியா, ஐலெட் அப்போப்டோசிஸ் (Islet apoptosis) மற்றும் நெக்ரோஸிஸ் (necrosis) போன்ற நீரிழிவு நோயாளிகளுடன் தொடர்புடைய உடல் நலக் கோளாறுகளில் தலையிட்டு, நோயாளிகளுக்கு சாதகமான வகையில் செயலாற்றும் திறமையுடையது என 'குர்க்குமின் அண்ட் டயாபெட்ஸ்' என்ற தலைப்பில் நடத்திய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.
எனவே, வெது வெதுப்பான பாலில் மஞ்சள் தூள் மற்றும் வெந்தயம் சேர்த்து குடிப்பதும், இவை இரண்டையும் உணவுகளின் தயாரிப்பில் ஒன்றாக சேர்த்து சமைத்து உட்கொள்வதும் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)