

உலக மக்கள் தொகையில் பலரும் மனநல ஆரோக்கியமின்மைக்கு ஆளாகி உள்ளனர். உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்ட தரவுகளின்படி, எட்டு பேரில் ஒருவருக்கு ஏதேனும் ஒரு மனநலப் பிரச்னை இருப்பதாக கூறுகிறது. இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 15 கோடி பேர் ஏதோ ஒரு வடிவில் மன அழுத்தம், பதட்டம் அல்லது மனச்சோர்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேகமான வாழ்க்கைமுறையில், கடும் எதிர்பார்ப்புகள் காரணமாக நகர்ப்புறவாசிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அதேவேளையில், கிராமப்புறங்களில் மன ஆரோக்கியம் பற்றி புரிதல் இருப்பது இல்லை. இளம் வயதினர் (18-35 வயதுக்குட்பட்டோர்) மற்றும் பெண்களும் இந்தச் சவால்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். மன ஆரோக்கியம் குறைவது என்பது தனிநபரின் வாழ்க்கைத் தரத்தை மட்டுமல்ல, உடலின் அத்தியாவசிய நோய் எதிர்ப்பு சக்தியையும் அச்சுறுத்துகிறது.
வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையேயான சமநிலையின்மை கடுமையான மன அழுத்தத்தை உருவாக்குகிறது. போதுமான அளவில் தூக்கமின்மை மன ஆரோக்கியத்தை அதிகம் பாதிக்கிறது. சமூக ஊடகங்களில் செலவிடப்படும் எல்லைமீறிய ஈடுபாடு, மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குகிறது.
போட்டி நிறைந்த உலகில் வெற்றி பெற வேண்டும் என்ற அச்சம், அழுத்தத்தை அதிகரிக்கிறது. வாழ்க்கை ஒரு பந்தயம் போல ஆகி விட்டதால், அது ஒரு ஓட்டமாக மாறி பதட்டத்துடன் எப்போதும் வைக்கிறது. பொருளாதார சூழல்கள் பலரையும் அதிகம் கலங்க வைத்து மனதை பாதிக்க வைக்கிறது. பொருளாதார சுமைகள் மற்றும் கடன்கள் ஒவ்வொரு மனிதரையும் பாதிக்கும் முக்கிய காரணியாக உள்ளது.
மன அழுத்தம் உடலில் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தி, மனதையும் உடலையும் படிப்படியாகச் சோர்வடையச் செய்கிறது. கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு பதட்டம் மற்றும் மனச்சோர்வு வழக்குகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மனநல நிபுணர்கள் மனதிற்கும் உடலுக்கும் இடையிலான தொடர்பை அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்துகின்றனர்.
ஒருவரின் மனநிலை பாதிக்கப்படும் போது 'கார்டிசோல்' போன்ற மனஅழுத்த ஹார்மோன்களின் அளவு இரத்தத்தில் அதிகமாகிறது. அதிகப்படியான ஹார்மோன் உடலில் உள்ள பல வளர்சிதை மாற்ற அமைப்புகளை சீர்குலைக்கிறது. இதனால் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. இதே போல உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இரத்த அழுத்தத்தை நிலையாக வைத்திருக்கவிடாமல், மாத்திரைகளின் செயல் திறனை மன அழுத்தம் பாதிக்கிறது. இதனால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் எதிர்பார்த்த பலனை அளிப்பதில்லை.
மனநலப் பிரச்னைகள், ஹார்மோன் சமநிலையின்மை, செரிமானக் கோளாறுகள், ஒற்றைத் தலைவலி, ஆஸ்துமா, மற்றும் இதய நோய் போன்ற பல்வேறு நாள்பட்ட நோய்களின் சிகிச்சைகளிலும் மன ஆரோக்கியம் முக்கியப் பங்கு வகிக்கிறது.மன அழுத்தமும் பதட்டமும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு ஆற்றலைக் சீரழிக்கிறது.
மேலும், மன இறுக்கம் தூக்கத்தைப் பாதிப்பதால், உடலால் மருந்துகளைச் சரியாக உறிஞ்சி சிகிச்சைக்கான ஆற்றலைத் திரட்ட முடிவதில்லை.
நம் ஆரோக்கியம் என்பது, நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை வைத்து தான் செயல்படுகிறது. மன ஆரோக்கியம் நேர்மறையான உணர்வுகளை மூளைக்கு கடத்தி , உடல் செயல்பாடுகளை ஊக்குவிப்பதால் சாப்பிடும் மருந்துகளின் பலன் கிடைக்கும். மனநலம் பற்றிய ஆரோக்கியமான செயல்பாடுகளையும் அது பற்றி விழிப்புணர்வுகளையும் அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)