வெந்தயம் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு மசாலா பொருள். சிறிது கசப்பு சுவையை கொண்ட வெந்தயம், நீரிழிவு நோயை விரைவில் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடியது என்று ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்திலும், சிறுநீரிலும் உள்ள குளுக்கோஸின் அளவை வெந்தயம் குறிப்பிட்ட அளவு குறைய வைக்கிறது. ஆனால் வெந்தயக் கீரை இந்தளவுக்கு பயன் தருவதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய வெந்தயத்தின் அளவு நோயின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். ஆனால் 25 முதல் 100 கிராம் வரை சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள்.
வெந்தயத்தை பொடி செய்து பாலில் அல்லது மோரில் கலந்து சாப்பிடும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் தினமும் இரண்டு முறை 13 கிராம் வெந்தயப் பொடியை பகல் உணவிற்கு முன்பு மற்றும் இரவு உணவிற்கு முன்பும் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள் ஹைதராபாத் தேசிய ஊட்டச்சத்து நிறுவன ஆராய்ச்சியாளர்கள்.
தினமும் 1200 முதல் 1400 கலோரிகள் சக்தி அளிக்கக்கூடிய உணவுடன் வெந்தயத்தை சேர்த்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேற்கண்ட கலோரி அளவையே நீரிழிவு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். வெந்தயத்தை சாதம், சப்பாத்தி மற்றும் காய்கறிகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் அந்த உணவு வகைகளின் இயல்பு கெடுவதில்லை என்கிறார்கள், வெந்தயம் உப மருந்தாக செயல்படுமேயன்றி மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக அமையாது. ஆனால், மருந்துகளின் அளவைக் குறைக்க உதவும். வழக்கமான பணியாக நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை தவிர்க்க வேண்டும், உடல் எடையை கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வெந்தயம் நீரிழிவு நோயாளிகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதை குறைத்து கட்டுக்குள் கொண்டு வரும் பண்பு வெந்தயத்துக்கு உண்டு. தினமும் காலை வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடித்து வர இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தைச் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து விட வேண்டும். காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை அப்படியே குடித்துவிட்டு வெந்தயத்தையும் சாப்பிட்டு விடலாம். ஒருவேளை இரவு முழுக்க ஊற வைப்பது அதிக கசப்பாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் வெந்தயத்தைச் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து விட்டு உடனே குடித்து விடலாம். இரவு முழுவதும் ஊறவைத்த வெந்தய நீரை கொதிக்க வைத்து டீ போலவும் குடிக்கலாம் (சர்க்கரை சேர்க்கக் கூடாது).
சர்க்கரை நோய்க்கு மாத்திரை, ஊசி எடுத்துக் கொள்பவர்கள் இயற்கை முறையில் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் என்கிறார்கள் பாரம்பரிய மருத்துவர்கள். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். வரக் கொத்தமல்லி அரை கிலோ, வெந்தயம் கால் கிலோ இவற்றை பொன் நிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பொடியில் இரண்டு டீஸ்பூன் எடுத்து இரண்டு டம்ளர் நீரில் கலந்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் சுண்டக் காய்ச்சி பிறகு அதை வடிகட்டி காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் சாப்பாட்டிற்கு முக்கால் மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டு வாருங்கள். இந்த நேரத்தில் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் குடிநீர் தவிர உண்ணக்கூடாது.
இப்படி ஒரு மாதம் செய்தாலே போதும் சர்க்கரை நோய் உங்கள் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். அதன் பிறகு உங்கள் இரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும், பின்பாகவும் பரிசோதனை செய்து உறுதி செய்யுங்கள்.
வெந்தயத்தையும், சீரகத்தையும் சம அளவு எடுத்து காயவைத்து தூளாக்கி அதை காலை, மாலை இருவேளையும் அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். வெந்தயத்தை கசப்பு காரணமாக சாப்பிடப் பிடிக்காதவர்கள் வெந்தயத்தை முளைகட்டிய பின் காயவைத்து பவுடர் செய்து சாப்பிட்டு வரலாம்.
கசப்புத் தன்மை கொண்ட இந்த வெந்தயம் அதிகளவு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. வெந்தயத்தை உணவுகளில் சேர்த்து வருவதன் மூலமோ அல்லது வெந்தய தண்ணீரை தினமும் குடிப்பதன் மூலமோ உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிரால் கரைந்து வெளியேறும். குறிப்பாக இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கார்டியோ வாஸ்குலர் போன்ற நோய்களை விரட்ட உதவி செய்யும். இதிலுள்ள மூலக்கூறுகளில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் அதிகமாக இருக்கின்றன. இவை உடலில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களைக் குறைக்கும். அதனால் ஆர்த்ரைடிஸ், ஆஸ்துமா போன்ற இன்ஃபிளமேஷன்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வெந்தயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெந்தயத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம். அதனால் இதில் உடல் எடையைக் குறைக்கும் பண்புகள் அதிகம். வெந்தயத்தில் நிறைய ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இதை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது நம்முடைய உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.