
இன்று பலருக்கும் மிகப்பெரும் பிரச்னையாக இருப்பது அதிக உடல் எடை. உடல் எடையை குறைப்பதற்காக பலரும் உணவின் அளவைக் குறைத்துக்கொள்வது, விரதமிருப்பது, இன்னும் சிலர் பட்டினி கிடப்பது எனவும் பல்வேறு முறைகளை கையாள்கிறார்கள். மேற்சொன்ன இவை எதுவுமின்றி, உடலினுள் ஆரோக்கியமாக வளர்சிதை மாற்றம் நடைபெறவும் அதன் மூலம் உடல் எடை குறையவும் உண்ண வேண்டிய ஐந்து வகை உணவுகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
நாம் உண்ணும் உணவு சரிவர ஜீரணமாகி சத்துக்கள் சக்தியாக மாற்றமடைந்து உடலின் இயக்கத்திற்கு உபயோகப்படுத்தப்படும் செயல்முறைகளையே வளர்சிதை மாற்றம் (Metabolism) என்கிறோம். கொழுப்புச் சத்து எரிக்கப்படுவதும் இச்செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். மெட்டபாலிசம், கலோரிகளையும் ஆற்றலையும் மிகவும் திறமையாக எரிக்கச் செய்து உயிரினங்கள் வளரவும், இனப்பெருக்கம் மற்றும் உடல் பராமரிப்பு ஆகியவற்றிற்கும் உதவுகிறது. வேகமான மெட்டபாலிசம் எடை இழப்பிற்கு உதவுகிறது. உடலின் தேவைக்கேற்ப சரியான விகிதத்தில் மெட்டபாலிசம் நடைபெற நாம் என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
ஓட்ஸ், பார்லி, குயினோவா, பிரவுன் ரைஸ், முழு கோதுமையில் தயாரிக்கப்பட்ட பிரட் ஆகியவற்றில் நார்ச்சத்து மிக அதிகம் உள்ளது. இவை நல்ல செரிமானத்துக்கு உதவுவதோடு, அடிக்கடி பசியுணர்வு ஏற்படுவதைத் தடுத்து, உட்கொள்ளும் உணவின் அளவைக் குறையச் செய்கிறது. இதனால் உடல் எடை கூடாமல் பராமரிக்க முடிகிறது.
இஞ்சி, சிவப்பு மிளகாய், கேயென்னே (Cayenne) பெப்பர் போன்றவற்றில் இருக்கும் கேப்ஸைசின் (Capsaicin) மற்றும் ஜின்ஜரால் (Gingerol) என்ற கூட்டுப் பொருள்களானது கொழுப்பை எரிக்கவும், மெட்டபாலிசம் சரிவர நடைபெறவும் உதவி புரிகின்றன.
க்ரீன் டீயில் உள்ள கேட்டசின் (Catachin) என்ற ஆன்டி ஆக்சிடன்ட் கொழுப்பை எரிக்கவும், மெட்டபாலிசம் சரிவர நடைபெறவும் பெரிதும் உதவுகிறது. மேலும் க்ரீன் டீயில் உள்ள நீர்ச்சத்தானது சீரான செரிமானத்துக்கு பக்கபலமாகிறது. க்ரீன் டீயை சூடாகவோ குளிர்வித்தோ தொடர்ந்து அருந்தி வந்தால் உடல் பருமன் அடைவது மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் உண்டாவது போன்றவை தடுக்கப்படும். காபியிலுள்ள கஃபைன் (Caffeine) என்ற பொருள் கொழுப்பை எரிக்கவும், மெட்டபாலிசம் சரிவர நடைபெறவும் தற்காலிக உதவிபுரியும்.
கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவுகளைக் காட்டிலும் லீன் புரோட்டீன் சத்துக்கள் அடங்கிய டர்கி (Turkey), சிக்கன் ப்ரெஸ்ட் (Chicken breast), மீன், டோஃபு, பருப்பு வகைகள், குறைந்த அளவு கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் ஆகியவை ஜீரணமாக அதிக சக்தி தேவைப்படும். இதன் மூலம் மெட்டபாலிசம் தற்காலிகமாக ஊக்குவிக்கப்படுகிறது. இவ்வாறான உணவுகளை தினசரி உட்கொண்டு உடல் எடை குறைத்து உடல் நலம் காப்போம்.