இந்தியர்களின் விருப்பமான உணவுகளில் ஒன்று பருப்பு மற்றும் பயறு வகைகள். இவற்றில் புரோட்டீன் சத்து மிக அதிகம். இவற்றை உண்பதால் உடல் பருமனை குறைப்பது எளிதாகிறது. இவ்வாறு எடை குறைப்பிற்கு உதவும் ஐந்து வகைப் பயறுகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பாசிப்பயறை தோலுடன் முழுதாகவும் பாதியாய் உடைத்த பருப்பாகவும், தோல் நீக்கிய பருப்பாகவும் எந்த வடிவிலும், சுண்டல், குழம்பு, கூட்டு, பச்சடி போன்ற உணவுகளாய் சமைத்து உண்ணலாம். முழுப் பயறில் நார்ச் சத்து அதிகம். இது அதிக நேரம் வயிற்றில் தங்கி, பசியுணர்வைத் தடுத்து எடையை குறையச் செய்ய உதவுகிறது. இதிலுள்ள அதிகளவு புரோட்டீன் மற்றும் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் இதை ஒரு சூப்பர் வெஜிடேரியன் உணவாக ஆக்குகிறது.
மசூர் பருப்பை ஒரு வேளை உணவில் சேர்த்து உண்பதால் அந்த நாளின் தேவையில் 32 சதவிகிதம் நார்ச் சத்து உடலுக்குக் கிடைத்து விடும். இதில் பொட்டாசியம், இரும்புச் சத்து மற்றும் ஃபொலேட் ஆகிய சத்துக்களும் உள்ளன.
கொண்டைக் கடலையில் புரோட்டீன், வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை அனைத்தும் சீரான செரிமானத்துக்கும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் உதவுவதோடு எடை குறைப்பிற்கும் துணை புரிகின்றன.
குறைந்த அளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது கிட்னி பீன்ஸ் எனப்படும் ராஜ்மா. இதில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம். இவை இதய ஆரோக்கியம் காக்கவும் இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவுகின்றன.
வைட்டமின் B, சிங்க் மற்றும் நார்ச் சத்துக்களின் பவர் ஹவுஸ் எனக் கூறப்படுவது மோத் பீன்ஸ் (Moth Beans). இச்சத்துக்கள் அனைத்தும் தசைகளின் வலுவான கட்டமைப்பிற்கும் எடைக் குறைப்பிற்கும் சிறந்த முறையில் உதவிபுரியக் கூடியவை.
மேற்கூறிய ஐந்து வகைப் பருப்பு வகைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்து உட்கொண்டு அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து அழகான தோற்றப் பொலிவோடு, ஆரோக்கியமாகவும் வாழ்வோம்.