எந்த அளவுக்கு புதிய புதிய தொழில் நுட்பங்கள், வசதி வாய்ப்புகள், உணவு பழக்க வழக்கங்கள் பெருகி வருகின்றனவோ. அதே அளவுக்கு நம் உடல்களில் பிரச்னைகளும் புதிது புதிதாக உருவாகின்றன. இதற்குத் தீர்வு காண அலோபதி, சித்த, ஆயுர்வேதா, இயற்கை வைத்தியம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழி தேடிச் சென்று கொண்டு இருக்கின்றோம். பண்டைய காலங்களில் சாதாரணமாக உணவில் சேர்த்துக்கொள்ளப்பட்ட பொருட்கள் இன்று பல்வேறு பெயர்கள் இடப்பட்டு காரண, காரியங்களோடு உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.
நீர்ச்சத்து அதிகம் உள்ள பொருட்கள் என்று பூசணிக்காய், பெங்களூர் கத்தரிக்காய், தர்பூசணி, சுரைக்காய், புடலங்காய், நார்ச்சத்துள்ள வாழைத்தண்டு என பல்வேறு பொருட்களை நம் உணவில் உட்கொண்டு வருகிறோம். இப்படி நம் உடல் நலத்திற்காக சேர்த்துக் கொள்ளக்கூடிய முக்கியமான பொருட்களில் ஒன்று ஆளி விதை. கி.மு. 3000 ஆண்டுகளின் துவக்கத்திலேயே பாபிலோனில் இந்த ஆளி விதைகள் பயிரிடப்பட்டு வந்தன.
கிபி எட்டாம் நூற்றாண்டில் ஆளி விதையின் ஆரோக்கிய பலன்களை அறிந்த சார்லெ மாக்னே என்ற மன்னன் தனது குடிமக்கள் அனைவரும் ஆளி விதையை சாப்பிட வேண்டும் என சட்டம் இயற்றினார். அந்த அளவிற்கு மக்கள் பண்டைய காலத்திலேயே ஆளி விதையைப் பற்றி அறிந்திருந்தனர். இந்த ஆளிச்செடி நிமிர்ந்து நேராக வளரும். இதன் இலைகள் நீல மற்றும் பச்சை நிறத்தில் மெல்லிய ஊசி வடிவில் நீல நிற பூவை கொண்டிருக்கும். இதன் விதைகள் வடிவில் மிகவும் சிறியதாகவும் மிகவும் மெல்லியதாகவும் இருக்கும்.
ஆளி விதையின் பயன்கள்: காவி நிற ஆளி விதையும் மஞ்சளாளியும் ஒரே ஊட்டச்சத்து உடையவை. அதில் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. இந்த அமிலம் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஒரு தேக்கரண்டி ஆளி விதையில் 1.8 கிராம் அளவிற்கு ஓமேகா3 உள்ளது. இதில் லிக்னென்ஸ் என்ற மூலக்கூறு இருப்பதால் ஆளி விதை உடலில் சேர்ந்ததுமே உயர் இரத்த அழுத்தமும் இதய நோய்களும் உடனே குணமாகின்றன.
அசைவு உணவு உண்ணாதவர்களுக்கு இந்த ஆளி விதை மிகவும் நல்லது. மீனில் கிடைக்கும் அதே அளவு ஒமேகா3 இந்த விதையில் கிடைக்கிறது. முதலில் இதய நோய்க்குக் காரணமான கொலஸ்ட்ராலையும், இரத்த அழுத்தத்தையும் குறைப்பதோடு, இரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தடுத்து உடல் நலத்தைக் காக்கிறது.
மூளையின் ஞாபக சக்தி செல்கள் சுருங்காமல் பார்த்துக்கொள்வதில் இது முதலிடத்தில் இருக்கிறது. நாம் சாப்பிடும் பல பொருட்களின் சில உணவுகளில் ஒமேகா 3யும், நார்ச்சத்தும் இருக்கின்றன. லிக்னன்ஸ் மூலக்கூறு ஆளி விதையில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆக்சிஜன் எதிர்ப்பு குணங்கள் பிரசித்திப் பெற்றவை ஆகும். இது பிற தாவர உணவுகளை விட 750 முதல் 800 மடங்கு ஆளி விதையில் உள்ளது. இந்த ஆளி விதையை அப்படியே சாப்பிட்டால் ஜீரணம் ஆகாமல் வெளியேறிவிடும். இதனால் பலனும் கிடைக்காது. எனவே, இதனை நன்றாக பொடித்துதான் சாப்பிட வேண்டும். அதுவும் உணவாக இல்லாமல் தேநீர் அருந்தும்போது எப்படி சர்க்கரையை சேர்த்துக் கொள்கிறோமோ அதுபோல் அன்றாட உணவுடன் இரண்டு ஸ்பூன் ஆளி விதை பொடியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். கடைகளில் பிளாக் சீட், லின் சீட், அல்ஸி என்ற பெயர்களில் இந்த விதை விற்பனை ஆகிறது. அதேபோல், இந்த ஆளி விதையை நமது உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்ள நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.
ஆளி விதையின் எண்ணெய், வண்ண சாயங்களில் மெருகெண்ணெய்களிலும் உலர வைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. இவற்றின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
ஆளிச் செடி விதைக்காகவும், நாருக்காகவும் வளர்க்கப்பட்டு வந்தாலும், இந்தச் செடியின் பல்வேறு பகுதிகள் நார், சாயம், மருந்துகள், மீன் வலை ஆகியவை தயாரிப்பதற்கும் பயன்படுகின்றன.
இதை பூங்காக்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இச்செடியின் நீல நிற பூக்களே இதன் தனித்தன்மை. சில பூக்களே இவ்வாறு முழு நீல நிறமாக காணப்படும். ஏனைய பூக்களில் கருஞ்சிவப்பு இழையோடும். இது கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது.