
நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடல் உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மற்றொரு உறுப்புடன் ஏதோ ஒரு வகையில் பிணைந்துள்ளது. ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும், அது மற்ற உறுப்புகளையும் பாதிக்கக் கூடும். அவ்வகையில் வாய் ஆரோக்கியத்திற்கு ஃப்ளோசிங் எந்த அளவிற்கு முக்கியம் என்பதை இப்போது பார்ப்போம்.
பற்கள் சுத்தமாக இருந்தால் தான் வாய் ஆரோக்கியமாக இருக்கும். பற்களை ஒழுங்காக பராமரிக்காவிட்டால், அது மூளையையும் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. அதாவது நல்ல வாய் ஆரோக்கியமானது, நல்ல மூளை ஆரோக்கியத்துடன் இணைந்துள்ளது. ஆகையால் பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமான முறையில் பாதுகாப்பது அவசியமாகிறது. இதற்குத் தான் ஃப்ளோசிங் நுட்பமானது உதவுகிறது.
ஃப்ளோசிங் என்பது பற்களுக்கு இடையிலான இடைவெளியை சுத்தம் செய்ய உதவும் முறையாகும். பற்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும் உணவுத் துகள்களை அகற்றவும், சிக்கலான பகுதிகளை சுத்தம் செய்யவும் இம்முறை உதவுகிறது. ஃப்ளோசிங் நுட்பத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடைபிடிப்பது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே பெற்றோர்கள் இப்பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். நாம் பின்பற்ற வேண்டிய நற்பழக்கங்களில் இதுவும் ஒன்று.
மெல்லிய நைலான் இழைகளால் உருவாக்கப்பட்டது தான் பல் ஃப்ளோஸ். இதனை பற்களின் இருபுறமும் நன்றாக மேல் கீழ் என சறுக்கி ஃப்ளோசிங் செய்ய வேண்டும். பற்களில் பாக்டீரியாக்கள் எங்கு அதிகமாக சேருமோ, அப்பகுதியில் ஃப்ளோசிங் செய்தால் ஈறு நோய், பற்சிதைவு மற்றும் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்க முடியும். தினந்தோறும் பல் துலக்கிய பிறகும் கூட பற்களுக்கு இடையில் பிளேக்குகள் சிறிய அளவில் இருக்கும். இதனை நீக்குவதற்கு ஃப்ளோசிங் செய்வது தான் சிறந்த வழி.
சரியான நேரத்தில் பிளேக்குகளை அகற்றாவிட்டால், அது கால்குலஸாக மாறி பற்சொத்தையை ஏற்படுத்தும். பிறகு பற்களை எடுக்க வேண்டிய சூழல் கூட ஏற்படலாம். பற்களைப் பிடுங்குவது கண் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆகையால் முடிந்த வரை பற்களின் பாதுகாப்பை நாம் தான் உறுதி செய்ய வேண்டும்.
ஈறு நோயானது வாய் ஆரோக்கியத்தைக் கெடுப்பதோடு, ஈறுகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் இரத்த ஓட்டத்திலும் நுழைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் மூளை உள்பட நம் உடலின் மற்ற உறுப்புகளிலும் பாதிப்புகள் ஏற்படக் கூடும். உடலில் ஏற்படுகின்ற இந்த அழற்சியானது, மூளை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஆகையால் தினசரி ஃப்ளோசிங் செய்து பற்களைப் பாதுகாப்பதன் மூலம், மூளை உள்பட பல உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். வாய் ஆரோக்கியத்தை சீராக பராமரித்து வந்தால், அது நினைவாற்றலையும் அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
நாம் பிறரிடம் பேசும்போது வாயில் இருந்து துர்நாற்றம் வீசினால், அது நமக்கே சங்கடமாக இருக்கும் அல்லவா. எந்தத் தயக்கமும் இன்றி பிறரிடம் பேசுவதற்கும் கூட வாய் ஆரோக்கியம் இன்றியமையாதது.