
சர்க்கரை நோய் என்பது பலருக்கும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தடுக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இத்தகைய சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உட்கொள்ளும் உணவில் கட்டுப்பாடுகள் அவசியம். சர்க்கரை நோயாளிகள் சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றையே அதிகம் சாப்பிடுகிறார்கள். இத்தகைய மாவுப் பொருட்களை சாப்பிடும்போது நீரிழிவு நோயாளிகள் அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பொதுவாகவே, கடைகளில் நாம் வாங்கும் நைசான கோதுமை மாவு சுத்திகரிக்கப்பட்ட மாவுடன் கலக்கப்படுவதால் அது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது அல்ல. எனவே, இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் மாவு வகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பார்லி மாவு: பார்லி மாவுக்கு குடல் ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. இதனால் ஒருவரின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
ராகி மாவு: ராகி மாவிலும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இது உங்களை நீண்ட நேரம் பசி எடுக்காமல் முழுமையாக வைத்திருக்க உதவும். இதனால் ஒருவர் அதிகப்படியான உணவை உட்கொள்வதைத் தடுக்க முடியும். இதன் விளைவாக நமது எடையும் கட்டுக்குள் இருக்கும். மேலும் அதிகப்படியான நார்ச்சத்து ஜீரணிக்க நேரம் எடுக்கும் என்பதால், இரத்த சர்க்கரை அளவு மெதுவாகவே இரத்தத்தில் அதிகரிக்கும்.
சுண்டல் மாவு: சுண்டல் மாவில் எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால் இரத்தத்தில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. மேலும், இரத்த ஓட்டத்தில் சர்க்கரை மெதுவாக உறிஞ்சுவதற்கும் இது உதவுகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு அவ்வளவு எளிதில் உயராது. இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதுடன் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் இந்த சுண்டல் மாவு உகந்ததாகும்.
கோதுமை மாவு: வேகவைத்த கோதுமை மாவில் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளதால், நமது இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது. மேலும், இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புபவர்கள் தாராளமாக கோதுமை மாவு எடுத்துக் கொள்ளலாம்.