
மழை மற்றும் குளிர் நிறைந்த காலங்களில் மூளை சுறுசுறுப்பின்றி, வேலை செய்வதில் ஆர்வம் குன்றி மந்த நிலையில் இருக்கும். மீண்டும் அதை நார்மலுக்குக் கொண்டுவர நமக்கு சூடாக ஒரு கப் தேநீரும், க்ரஞ்சியா சில வகை ஸ்னாக்ஸ்களும் தேவைப்படும்.
நாம் எடுத்துக்கொள்ளும் ஸ்னாக்ஸ் எந்த வகையாக இருந்தாலும் அது நம் வயிற்றின் ஆரோக்கியத்தைக் கெடுத்து விடாமல் பார்த்துக் கொள்வது நம் கடமை. அதற்கு, குறிப்பிட்ட சில வகை உணவுகளை நாம் தவிர்த்து விடுவதே நலம். அவை என்னென்ன உணவுகள், அவற்றைத் தவிர்ப்பதற்கான காரணம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
மர்மமான முறையில் மறைத்து வைத்திருக்கும் தண்ணீரை உபயோகித்து தயாரிக்கப்படும் பானி பூரி மற்றும் பேல் பூரி தவிர்க்கப்பட வேண்டியவை. மழை நேரங்களில் சுத்தமும் சுகாதாரமும் மிக முக்கியம். கை வண்டிகளில் விற்கப்படும் உணவுகளை உண்ணாமல் இருப்பதே நலம்.
ஏற்கனவே துண்டுகளாக்கி கோப்பையில் நிரப்பப்பட்டிருக்கும் பழத்துண்டுகளை வாங்குவது உசிதமல்ல. அவற்றின் மீது எத்தனை தூசி படிந்திருக்குமோ, எத்தனை ஈ, கொசு போன்றவை அமர்ந்து எச்சிலையும் எச்சத்தையும் விட்டுச் சென்றிருக்குமோ தெரியாது.
மழையின் ஈரப்பதத்தால் நமத்துப் போன வடை, சமோசா, கச்சோரி போன்றவற்றை வாங்க வேண்டாமே. மொறுமொறுப்பில்தான் அதன் ருசியே உள்ளது.
மழை காலத்தில் அடிக்கடி பவர் கட் ஆவது சகஜம். அப்போது இறைச்சி மற்றும் கோழிக்கறி போன்ற உணவுப் பொருட்கள் முறையாக சேமித்து வைக்கப்பட்டிருக்காது. இவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளைத் தவிர்ப்பது நலம்.
மீன் போன்ற கடல் வாழ் உயிரின உணவுகள், ஃபிரஷ்ஷா பிடித்து சமைக்கப்பட்டிருந்தால் மட்டும் உண்ணலாம். இதை உறுதிப்படுத்திக் கொள்ள எந்த வழியும் கிடையாது. எனவே தவிர்ப்பது நலம்.
பால் பொருட்களை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் பொதுவாகவே சீக்கிரம் கெட்டுவிடும். ஈரப்பதமுள்ள சீசனில் கேட்கவே வேண்டாம். தூர விலக்கிவிடலாம்.
தள்ளு வண்டிகளில் விற்கப்படும் கரும்பு ஜூஸ் மற்றும் லெமன் சோடா போன்றவை வேண்டவே வேண்டாம். ஏனெனில் அவற்றில் சேர்த்திருக்கும் ஐஸ் கட்டிகள் எந்த தண்ணீரிலிருந்து தயாரிக்கப்பட்டதோ, தெரியாது.
ஃபிரஷ் சாலட் உடலுக்கு ஆரோக்கியமானதுதான் என்றாலும், அதை வெட்டிய கத்தி மற்றும் கைளில் எத்தனை அழுக்குகள் இருந்ததோ. ஆகவே இதையும் தவிர்த்து விடுதல் நலம்.
பின் எதைத்தான் சாப்பிடுவது என்கிறீர்களா? உங்கள் கிச்சனிலிருந்து சூடாகத் தயாரிக்கப்படும் கிரிஸ்ப்பியான ஸ்னாக்ஸ் மற்றும் காபி, டீ போன்ற உணவுகளை உண்டு மகிழுங்க. மழையையும் குளிரையும் அனுபவித்து ரசியுங்க!!
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.