
அனைவருக்கும் தேவையான முக்கியமான ஒரு ஊட்டச்சத்து வைட்டமின் டி ஆகும். இது எளிமையான முறையில் சூரிய ஒளியின் மூலம் பெறப்படும் வைட்டமினாக உள்ளது. வைட்டமின் டி கொழுப்பில் கரையக்கூடியது. இதில் டி2, டி3 என இரண்டு வகைகள் உள்ளன. வைட்டமின் டி2 சில வகை காய்கறிகளில் மற்றும் இயற்கைப் பொருட்களில் கிடைக்கின்றது. வைட்டமின் டி3 அசைவ உணவுகளிலிருந்தே அதிகம் பெறப்படுகிறது.
உடலில் வைட்டமின் டி இருந்தால் தான், அது கால்சியத்தை உறிஞ்சி உடலுக்கு வலுசேர்க்கும். இது எலும்புகள், நகங்கள் மற்றும் பற்களை ஆகியவற்றை வலுவாக வைத்திருக்க தேவைப்படுகிறது. மேலும் தசை திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
குழந்தைகளின் வளர்ச்சியில் வைட்டமின் டி இன்றியமையாத ஒன்றாகும். இது அவர்களின் உடல் வளர்ச்சி, உயர வளர்ச்சிக்கு முக்கிய பங்கை வகிக்கிறது.
வைட்டமின் டி குறைபாடு உள்ள குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் , அவர்கள் உயரம் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள். இதனால் எலும்புகள் மெலிந்து பலவீனமாகி முதுகு வளையும் பிரச்சனைக்கு காரணமாக இருக்கும். மேலும் அவர்களுக்கு அடிக்கடி உடல்வலி, எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.
பெரியவர்களுக்கு வைட்டமின் டி அளவு குறைவாக இருந்தால், அது ஆஸ்டியோமலேசியா அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சார்ந்த நோய்களுக்கு அடிப்படையாக இருக்கும். இதனால் அவர்களின் எலும்புகள் மிகவும் பலவீனமாகி லேசான அடிக்கு, சிறிய தடுமாற்றத்திற்கு கூட எலும்புகளை உடைய வைக்கும்.
வைட்டமின் டி குறைபாடு குறிப்பாக வெயிலில் சருமம் படாமல் இருப்பதால் உருவாகிறது. கார்களில் அல்லது மூடிய வாகனங்களில் பயணம் செய்து , அலுவலகங்களில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்குக் இந்தக் குறைபாடு காணப்படுகிறது. இவர்களால் சூரிய ஒளியை சரியான விதத்தில் பெற முடியவில்லை. வைட்டமின் டி அளவுகள் குறைவதற்கு மற்றொரு காரணம், அடிக்கடி வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சேர்க்காதது ஆகும். இன்று அதிகளவில் மக்கள் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைட்டமின் டி சைவ உணவுகளில் பெறும் முறை:
பாலில் வைட்டமின் டி அதிகளவில் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தினசரி உணவில் குறைந்தது ஒரு கப் பாலையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் அதிக அளவில் கிடைக்கும். பால் தவிர தயிர் , மோர், பன்னீர் , வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் டி கிடைக்கிறது.
காளான்கள் வைட்டமின் டி அதிகளவில் உள்ள ஒரு சைவ உணவாகும். இது வளரும் போதே சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டியை நேரடியாக உறிஞ்சுகிறது. இதில் D2 மற்றும் D3 யின் ஆதாரம் அதிகமாக உள்ளது.
சோயா சங்களிலும் அதிகளவில் வைட்டமின் டி ஊட்டச்சத்து கிடைக்கிறது .
மேலும் அவகோடா, கேரட், பிராக்கோலி, கீரைகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் கிடைக்கிறது.
சரியாக அளவில் மேற்கூறிய உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதுடன் , அடிக்கடி வெயிலில் சில நிமிடங்கள் சென்று வந்தால் வைட்டமின் டி எளிதில் கிடைக்கும். இதனால் உடலை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள முடியும்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.