இந்துக்களின் அடிப்படை நியதிகள் மற்றும் வாழ்க்கை முறைகள் வேதங்கள் வழியே அமைவதாக ஒரு கருத்து உண்டு. வேதங்கள் இயற்றப்பட்ட காலங்களைக் கணக்கில் கொண்டு ஆரம்ப வேத காலம் மற்றும் பிந்தைய வேத காலம் என இரண்டு காலகட்டங்களாக பிரிக்கப்படுகின்றன.
வேதங்களில் பழமையானது ரிக் வேதம். வேத-ஸம்ஹிதைகளிலும், கிரந்தங்களிலும் கிடைத்த ஜோதிடம் பற்றிய பல குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு பால கங்காதர திலகரும், ஜெர்மானிய அறிஞரும் ஆராய்ந்து வேதத்தின் ஆரம்ப காலம் கி.மு. 4000 என்று நிர்ணயித்திருக்கிறார்கள் என்று சொல்கிறது குறிப்புகள்.
அதே சமயம் ஆரம்பகால வேத காலம் 2000 ஆண்டுகளுக்கும் மேலானது. இது கிமு 1500 இல் ரிக் வேதம் உருவாக்கப்பட்டதிலிருந்து தொடங்கி ரிக்வேத சம்ஹிதையுடன் முடிகிறது என்றும், பிற்கால வேத காலம் சுமார் 1200 ஆண்டுகள் (கிமு 1500-500 ) எனவும் கருத்துக்கள் உண்டு.
இந்துக்களைப் பொறுத்தமட்டில் மனிதரால் இயற்றப்படாத வேதத்துக்கு காலம் என்பதே இல்லை என்று கருத்தும் உண்டு. இப்படி வேதங்களின் காலம் பற்றி பல்வேறு முரணான கருத்துகள் உண்டு என்றாலும் வேத காலம் என்பது மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த காலமாக இருந்துள்ளது.
சரி.... வேதகாலத்தில் மக்கள் என்ன மாதிரியான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டிருந்தனர்? இதோ பார்ப்போம்.
நாம் இக்காலத்தில் பயன்படுத்தும் பெரும்பாலான உணவுகள் வேதகாலத்திலும் பயன்பாட்டில் இருந்ததை பழங்கால குறிப்புகள் மூலம் அறியலாம். குறிப்பாக பண்டைய இந்தியாவின் பல பகுதிகளில் அரிசி ஒரு முக்கிய உணவாக இருந்தது. மற்றொரு முக்கியமான தானியமாக பார்லியில் தயாரித்த கஞ்சி, ரொட்டி மற்றும் பிற உணவுகளும், பால், தயிர், நெய் போன்றவையும் முக்கிய உணவுகளாக இருந்துள்ளன.
ரொட்டி என்பது வேத காலத்தில் ஒரு முக்கிய உணவாக இருந்துள்ளது . பணக்காரர்கள் மதிப்பு மிக்க கோதுமை ரொட்டியையும், வசதியற்றவர்கள் மலிவான பார்லி ரொட்டியையும் சாப்பிட்டுள்ளனர். கீரை வகைகளும், வெள்ளரிகள், முலாம்பழம், மற்றும் சுரைக்காய் போன்ற பிற காய்கறிகளும் வேத உணவின் ஒரு பகுதியாக இருந்தன.
பண்டைய இந்தியாவில் மாம்பழங்கள் புனித பழமாகக் கருதப்பட்டன. மாம்பழத்துடன் வாழைப்பழங்களும், பேரீச்சம்பழம், திராட்சை மற்றும் மாதுளை போன்ற பிற பழங்களும் உண்பதற்கு ஏற்றவையாக இருந்துள்ளது.
அதேபோல் ஆன்மீக புனித பானமாகக் கருதப்பட்ட பால் மற்றும் அதிலிருந்து வரும் வெண்ணெய் அல்லது மதிப்பு கூட்டிய நெய் சமையலுக்கும் சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டது. உணவுகளில் முக்கிய இடம் வகித்த தயிரும் பெரும்பாலும் தேன் அல்லது பிற இனிப்புகளுடன் உட்கொள்ளப்பட்டது.
குறிப்பாக இயற்கையான தேன் ஒரு இனிப்பு சுவையூட்டும் பொருளாகவும் மருத்துவ குணங்களைக் கொண்டு ஆரோக்கியம் காக்கவும் பெருமளவு பயன்பட்டது. பாதாம், எள் மற்றும் கொட்டைகள் மற்றும் விதைகள் சிற்றுண்டிகளாகவோ அல்லது உணவுகளில் சேர்க்கப்பட்டோ பயன்படுத்தப்பட்டன.
சங்ககால நூல்கள் தரும் குறிப்பில் ரொட்டி மற்றும் அப்பம் போன்றவைகளுடன் சோம பானம் எனப்படும் புளித்த பானம், (வேதகாலத்தில் தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது) மற்றும் தயிருடன் தேன் சேர்த்த பானங்களும் புழக்கத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. மேலும் வேதகாலத்தில் அரிதாக இறைச்சியும் உணவில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பிட்டது சிறு பகுதிதான். ஆராய்ந்தால் வேத உணவுமுறை, ஆரோக்கியமான உள்ளூரில் கிடைக்கும் உணவுகளின் முக்கியத்துவத்தையும், ஊட்டச்சத்து மற்றும் ஆன்மீக வளர்ச்சியையும் உணவின் வழிமுறையாக இருந்து வந்ததை அறியலாம்..