இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் வாழ்க்கை முறை மிகவும் மோசமாக மாறிவிட்டது. குறிப்பாக நம்முடைய உணவுமுறைப் பழக்கம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரித்துவிடுகிறது. இதனால்தான் இளைஞர்களுக்கும் இப்போது மாரடைப்பு ஏற்படுகிறது.
எனவே நம் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தி குறைக்கவில்லை என்றால், அது இதயத்தை மோசமாக பாதிக்கும் என்பதோடு மட்டுமின்றி, பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது. எனவே நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை நாம் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. இந்த பதிவில் இயற்கையாக கொலஸ்ட்ராலை விரைவாக எரிக்கும் சில உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வெந்தயம் - வெந்தயத்தில் இரும்பு சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம் போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது நம் உடலில் உள்ள கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. ஒரு ஸ்பூன் வெந்தய பொடியை வெந்நீரில் கலந்து இரண்டு வேளை குடித்து வந்தால், கொழுப்பு வேகமாக உடலில் இருந்து வெளியேறும். உண்மையிலேயே இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மஞ்சள் - மஞ்சளில் குர்குமின் என்ற ரசாயனம் உள்ளது. இது சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற பண்பு கொண்டது. இது கெட்ட கொழுப்புகளை உடைத்து உடலில் இருந்து விரைவாக அகற்ற உதவுகிறது. பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து தினசரி இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டு வந்தால், உடல் கொழுப்பு குறையும்.
பூண்டு - இயற்கையாகவே பூண்டில் கந்தகம் உள்ளது. இது ரத்தத்தை இளக வைத்து கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். வாரம் ஒருமுறை ஐந்து பூண்டு பற்களை அரைத்து, ஒரு கப் பால் அல்லது தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
தேன் - தேனில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் இருப்பதால் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இது இதய தமனிகளில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை தடுக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால், உடலில் உள்ள கொழுப்புகள் வேகமாக குறைய ஆரம்பிக்கும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இது பெரிதும் உதவும்.
இப்படி இந்த நான்கு இயற்கை பொருட்களை உங்கள் உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்ளும்போது, கொலஸ்ட்ராலின் அளவு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இதயத்தை பாதுகாக்கிறது.