சீஸ் என்றால் பாலாடைக் கட்டின்னு சிம்பிளா சொல்லிடலாம். ஆனா, அந்த சீஸ் எப்போது தயாரிக்கப்பட்டது, அதன் நிறம், சுவை, மிருதுவானதா அல்லது கடினமானதா, வடிவம், செரிவூட்டப்பட்டதா, எந்த மாதிரியான கூட்டுப்பொருள்கள் சேர்ந்தது என்ற விவரங்களையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு எண்ணிலடங்கா வகைகளில் சீஸ்கள் விற்கப்படுகின்றன.
அமெரிக்கர்களின் தினசரி உணவில் சீஸ் இன்றியமையாத ஒன்று என்று கூறலாம். அதிகளவிலான சீஸ் அமெரிக்காவில்தான் உபயோகப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சௌகரியப்படி உபயோகிக்கவென்று மெலிதான சதுர வடிவிலும், துகள்களாகவும், ஸ்டிக்காகவும், துருவிக்கொள்ளும் வசதிக்காக பெரிய கட்டிகளாகவும் பல உருவில் கிடைக்கிறது சீஸ். சீஸ்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வகை என்றால் க்ரீம் சீஸ், சுவிஸ் சீஸ், காட்டேஜ் சீஸ், ரிக்கோட்டா, மொஸ்ஸரெல்லா, செட்டார், பர்மேசன் போன்றவற்றைக் கூறலாம்.
பர்மேசன் சீஸில் உள்ள நன்மைகள் என்னென்னவென்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
இந்த வகை சீஸில் உயர்தரமான புரோட்டீன்கள் அதிகம் அடங்கியுள்ளன. புரோட்டீன்களானது திசுக்களின் வளர்ச்சிக்கும் சேதமான திசுக்களைப் புதுப்பிப்பதற்கும் உதவி புரிபவை. மேலும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்து முழு உடலின் ஆரோக்கியத்தையும் காக்கக் கூடியவை. எலும்பு மற்றும் பற்களின் வலிமைக்கும் பராமரிப்பிற்கும் அத்தியாவசியத் தேவையான கால்சியம் என்ற கனிமச்சத்து பர்மேசன் சீஸில் அதிகம் நிறைந்துள்ளது. இது ஆஸ்டியோபொரோசிஸ் நோய் வரும் ஆபத்தையும் தடுக்கிறது.
மற்ற சீஸ்களைப் போல் அல்லாமல் இதில் லாக்டோஸ் அளவு மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. காரணம், இதன் தயாரிப்பு நீண்ட நாட்களை எடுத்துக்கொள்வதால் அந்தக் காலத்தில் லாக்டோஸ் அளவு குறைக்கப்பட்டுவிடுகிறது. அதனால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களும் இதை உண்ண ஏதுவாகிறது. வைட்டமின் A, வைட்டமின் B12 மற்றும் சிங்க், பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்களுடன், மேலும் பல ஊட்டச் சத்துக்களும் பர்மேசன் சீஸில் நிறைந்துள்ளன. இச்சத்துக்கள் பார்வைத் திறனை மேம்படுத்தவும் மெட்டபாலிசம் சரிவர நடைபெறவும் உதவுகின்றன; உடல் ஆரோக்கியம் முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது. இதில் 28 முதல் 34 சதவிகிதம் கொழுப்புச் சத்து உள்ளது.
பர்மேசன் சீஸில், ‘உமாமி’ எனப்படும் காரச் சுவை அதிகளவில் உள்ளது. காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உபயோகித்து தயாரிக்கப்படும் உணவுகளில் இச்சீஸை சேர்க்கும்போது அவற்றின் சுவை மேலும் பன்மடங்கு கூடுகிறது; உட்கொள்ளும் உணவின் அளவும் கூடும். இவ்வாரெல்லாம் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய சீஸ் வகைகளை குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸாகவும், பாஸ்தா, சாண்ட்விச், கேக் போன்ற உணவு வகைகளில் அளவோடு சேர்த்து தயாரித்தும் உட்கொண்டு நாமும் நலம் பெறுவோம்.