பொதுவாகவே, நமது உடலில் மழை மற்றும் குளிர் காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால்தான் அக்காலங்களில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க வைட்டமின் சி சத்து உதவுகிறது. இந்தக் காலகட்டத்தில் சருமத்தில் வறட்சி ஏற்படும். இதனைத் தவிர்த்து சருமத்தில் எண்ணெய் பசை குறையாமல் பார்த்துக் கொள்வது வைட்டமின் சி சத்துதான். மழை மற்றும் குளிர் காலங்களில் இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்தும் குறையும். இதனையும் ஈடுகட்டுவது வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள்தான்.
இந்த வைட்டமின் சி சத்து சிட்ரிக் அமிலம் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, பேரீச்சை, நெல்லிக்காய், தக்காளி, பப்பாளி போன்றவற்றில் உள்ளது. பழங்களில் கொய்யாப்பழம் வைட்டமின் ‘சி’ நிறைந்தது. அடிப்படையில் கொய்யாப்பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு ‘சளி விரட்டி’ ஆகும். மழைக்காலத்தில் சளி ஏற்படுத்தும் பிரச்னைகளுக்கு கொய்யாப்பழம் முழு நிவாரணம் தருகிறது. மழைக்காலத்தில் கனிந்த கொய்யாப்பழம் தவிர்த்து கொய்யாக்காயை சாப்பிட வேண்டும்.
மழை மற்றும் குளிர் காலங்களில் வைட்டமின் டி குறைபாடு காரணமாக எலும்புகளின் பலம் குறையும். இந்த காலகட்டத்தில்தான் அதிக மூட்டு வலி வரும். தினமும் 600 யூனிட் வைட்டமின் டி நமது உடலுக்குத் தேவை. இது 70 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு. இதனை ஈடுகட்ட இந்த காலகட்டத்தில் முடிந்த மட்டும் சிறிது நேரமாவது (20 முதல் 30 நிமிடங்கள்) சூரிய ஒளியில் காலை நேரத்தில் நில்லுங்கள். முட்டை, மீன், தேங்காய், கடலை போன்றவற்றில் இது உள்ளது. மழை மற்றும் குளிர் காலங்களில் சருமம் அதிகளவில் உலர்ந்து பல சருமப் பிரச்னைகளை ஏற்படும். அதனால் சருமத்தை உலராமல் பாதுகாக்கும் தன்மை வைட்டமின் ‘ஈ’ல் உள்ளது. இந்த சத்துக்கள் முருங்கைக்காய், முந்திரி பருப்பு, பேரீச்சை, மீன், பசலைக்கீரை, புரோக்கோலி, கொட்டை உணவுகளில் அதிகமுள்ளது.
மழை மற்றும் குளிர் காலங்களில் வாய்களின் ஓரங்களில் புண், பாதங்களில் புண், உதடுகளில் வெடிப்பு, சரும வெடிப்பு மற்றும் சருமத்தில் சொர சொரப்பாக இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுவது சகஜம். இதற்குக் காரணம் வைட்டமின் ‘பி’ குறைபாடுகள்தான். இதனைத் தவிர்க்க வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உணவுகள் உதவும். குறிப்பாக வைட்டமின் பி6 உணவுகள் உதடுகளில் வெடிப்பு, வாய் ஓரத்தில் புண், சரும வெடிப்புகளைத் தவிர்க்க உதவும். இவை வாழைப்பூ, பூசணி, முருங்கைக்காய், முட்டை, கீரைகள், பீன்ஸ், வாழைக்காய், கோழி இறைச்சி, ஈரல் மற்றும் மீன் உணவுகளில் அதிகம் உள்ளது.
மழை மற்றும் குளிர் காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் ஒமேகா 3 கொழுப்பு முக்கியமான பங்காற்றுகிறது. குறிப்பாக மூட்டுகளில் உள்ள எண்ணெய் பசையை பராமரித்து அதனை வலிகளில் இருந்து பாதுகாக்கிறது. ஒமேகா 3 சத்து கால்சியம் சத்தை உடலில் அதிகரித்து எலும்புகளுக்கு பலத்தை சேர்க்கிறது. இவை மீன், ஆளி விதைகள் மற்றும் கொட்டை உணவுகளில் அதிகமுள்ளது.
மழைக்காலங்களில் ஏற்படும் நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடுகளை சரி செய்ய கசப்புத் தன்மை கொண்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். மழைக்காலங்களில் ஏற்படும் பித்த தோஷங்களை கசப்புத் தன்மை கொண்ட உணவுகள் சமநிலைப்படுத்துகிறது. இக்காலங்களில் பாகற்காய், புடலங்காய், சுரைக்காய் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றில் அதிகளவு கால்சியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு உள்ளது. இவை உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.