
குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்பதை அறிந்து கொள்ள எளிய வழி தாய்ப்பால் குடித்த ஒரு மணி நேரம் வரை குழந்தை பசி தாங்கும். அதற்கு முன்பே குழந்தை பசிக்காக அழுதால் தாய்ப்பால் போதவில்லை என்று அர்த்தம். குழந்தை பிறந்த முதல் 7, 8 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் கூடுதலான புரதச் சத்துள்ள உணவுகளையும், அதிக கலோரிகளையும் எடுத்துக் கொள்வது நல்லது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன என்பதை இப்பதிவில் காணலாம்.
1. புரதச் சத்துள்ள உணவுகள்:
மனதில் கவலை, மன அழுத்தம், வலி மற்றும் நம்பிக்கையின்மை போன்ற காரணங்களால் பால் சுரப்பதில் குறைபாடு ஏற்படக்கூடும். எனவே, பால் அதிகமாக சுரக்க மன அமைதியும் சந்தோஷமும் மிகவும் முக்கியம். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க முட்டை, பால், மீன், இறைச்சி போன்ற புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
2. விட்டமின் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்த உணவுகள்:
முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பாலக்கீரை, வெந்தயக்கீரை மற்றும் கடுகு கீரையில் விட்டமின், கால்சியம் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது போன்ற கீரை வகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது பால் சுரக்க உதவும்.
3.காய்கறிகள்:
காய்கறிகளில் பீட்ரூட், கேரட், சுரைக்காய், பப்பாளிக்காய், உருளைக்கிழங்கு, சித்த மருத்துவத்தில் சதாவரி கிழங்கு, முள்ளங்கி போன்ற காய்கறிகள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும். பப்பாளிக்காய் ஆக்சிடோசின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும். விட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட்டை ஜூஸாகவோ, சாலட்டாகவோ தினமும் எடுத்துக் கொள்ள தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.
4. தானியங்கள்:
எள், பூண்டு, ஓட்ஸ், முளைகட்டிய பயறு மற்றும் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஓட்ஸ், வெந்தயம், கீரை வகைகள் மற்றும் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிப்பது பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்க உதவும்.
முழு தானிய ரொட்டி, பருப்பு வகைகள், பால் பொருட்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது நல்லது. வெந்தயத்தில் அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளதால் குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும். வெந்தயக்கீரையில் விட்டமின், கால்சியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இவற்றையும் எடுத்துக் கொள்ள தாய்ப்பால் சுரப்பு அதிகம் இருக்கும்.
5. பெருஞ்சீரகம்:
இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு கப் நீரில் ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து அந்த நீரை காலையில் பருக தாய்ப்பால் அதிகரிப்பதுடன் வயிற்று வலி போன்ற அசௌகரியங்களும் நீங்கும்.
6. பழங்கள்:
பழங்களில் அத்திப்பழமும், பேரிச்சம்பழமும் தாய்ப்பால் சுரக்க பெரிதும் உதவும். ஆப்பிள், பீட்ரூட், வாழைப்பழம் போன்ற பழங்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.
தாய்ப்பால் இயற்கையாக அதிகரிக்க இரும்புச்சத்து, கால்சியம், நாச்சத்து நிறைந்த ஓட்ஸ் கஞ்சியை கொடுப்பது மிகவும் நல்லது. தாய்ப்பால் கொடுக்கும்போது காஃபின், அதிக பாதரசம் கொண்ட மீன், செயற்கை இனிப்புகள் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.