சுட்டெரிக்கும் கோடை வெயில் என வரும்போது, நமது ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பராமரிக்க தினசரி போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அதிலும் இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனக் கூறுகின்றனர். எனவே நீரிழப்பை எதிர்த்து போராடுவதற்கு நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது முக்கியமானது. இந்தப் பதிவில் கோடைகாலத்தில் உங்களை நீரேற்றமாகவும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் சில உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தர்பூசணி: தர்பூசணிப் பழத்தில் 90% நீர்சத்து இருப்பதால், கோடைக்கு ஏற்ற ஒரு சிறந்த பழமாகும். இதில் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளதால் உடலின் திரவ சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது. தினசரி தர்பூசணி சாப்பிடுவது மூலமாக நாம் நீரேற்றத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம்.
வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காய் நாம் நம்ப முடியாத அளவுக்கு நீர்ச்சத்து நிறைந்த காயாகும். இதில் தோராயமாக 96% தண்ணீர் உள்ளது. வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இதில் இருப்பதால், தினசரி உணவில் வெள்ளரிக்காயை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இளநீர்: இளநீரில் இயற்கையாகவே எலக்ட்ரோலைட் நிறைந்துள்ளது. இது நம் திரவத் தேவையை பூர்த்தி செய்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற அத்தியாவசியத் தாதுக்களையும் வழங்குகிறது. எனவே கோடைகாலத்தில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட கார்பனேட்டட் பானங்களைக் குடிப்பதற்கு பதிலாக, இயற்கையாகக் கிடைக்கும் இளநீர் வாங்கிக் குடியுங்கள்.
மோர்: மோர் ஒரு பாரம்பரிய இந்திய பானமாகும். இது நீரிழப்பை எதிர்த்துப் போராட பெரிதளவில் உதவுகிறது. தயிரை தண்ணீரில் கரைத்து, சீரகம், கொத்தமல்லி, புதினா, இஞ்சி போன்ற மசாலா பொருட்களை சேர்த்து குடிப்பதால், உடலுக்கு உற்சாகத்தை அளித்து செரிமானத்திற்கு உதவுகிறது. எனவே கோடை காலத்தில் அவ்வப்போது மோர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
ஆரஞ்சு: ஆரஞ்சு ஒரு சுவையான சிட்ரஸ் பழம் மட்டுமல்ல உடலுக்கு நீர்ச்சத்து சேர்க்கக்கூடிய அற்புதப் பழம். இதில் விட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே வெயில் காலத்திற்கு ஆரஞ்சு பழமும் ஒரு சிறந்த தேர்வாகும். காலை வேலையில் சில துண்டு ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களுடன் தண்ணீரும் கிடைக்கிறது.
புதினா: புதினா இலைகள் குளிர்ச்சித்தன்மை கொண்டவை என்பதால், உடலுக்கு வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கும். புதினா இலைகளை தண்ணீரில் சேர்த்து குடிப்பதால் தினசரி நீர் தேவையை நாம் பூர்த்தி செய்யலாம். மேலும் இதை சாலட்கள், தயிர் ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடும்போது ஒரு திருப்திகரமான உணர்வைக் கொடுக்கிறது.