கல்லீரல் நன்றாக இயங்க இஞ்சி, நெல்லிக்காய், திராட்சை, வால்நட், பீட்ரூட், முட்டை போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். முட்டைகோஸ், காலிபிளவர், புரோக்கோலி போன்றவற்றில் சல்பர் சத்து அதிகம் உள்ளது. இவை கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. அதைப்போலவே, மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் வேதிப்பொருள் கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.
கல்லீரல் பிரச்னைக்கு மது அருந்துதல், அடிக்கடி ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை சாப்பிடுதல் முக்கியமான காரணமாகும். கல்லீரல் என்பது நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு. இந்த உறுப்பு எவ்வளவு பெரியதோ அந்த அளவு அதற்கு வேலையும் அதிகம். இது 500க்கும் மேற்பட்ட அதிகமான வேலைகளைச் செய்கிறது. கல்லீரல் பைல் ஜூஸை (Bile juice) உற்பத்தி செய்கிறது. இது வயிற்றில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. உடலுக்குத் தேவையான சில புரதங்கள், கொலஸ்ட்ரால், ஹார்மோன்கள் போன்ற முக்கியமானவற்றையும் உற்பத்தி செய்கிறது. இப்படிப்பட்ட முக்கியமான கல்லீரலை வலுப்படுத்த நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
முழு தானியங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். நார்ச்சத்து மிகுந்த முழு தானியங்கள் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. தினமும் ஒரு கப் அளவிலாவது முழு தானியங்களை எடுத்துக்கொள்வது நல்லது.
பச்சை இலை காய்கறிகள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். இவற்றில் பலவிதமான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. பச்சை காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலம் கல்லீரலில் அழுத்தத்தை குறைத்து கல்லீரலை பலப்படுத்த முடியும்.
பழங்களில் ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெரி, கிரேப், கிரான் பெர்ரி போன்றவை கல்லீரலை சுத்தப்படுத்த உதவும். பாதாம் மூளைக்கு மட்டுமல்ல, கல்லீரலுக்கும் நல்லது. இதில் உள்ள பாலி சாட்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கல்லீரல், சிறுநீரகம், மூளை, இதயம் ஆகியவற்றை பாதுகாக்கின்றது. முக்கியமாக, கல்லீரலை வலுப்படுத்த உடற்பயிற்சியும் அவசியம். ஏரோபிக் உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவை கல்லீரலை பலப்படுத்தும்.