மூலம் நோய் என்பது ஆசன வாயைச் சுற்றி அல்லது மலக்குடலுக்கு அருகில் உள்ள இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து இருப்பதாகும். இதற்கு சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் வலி, இரத்தம் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மூல நோய்க்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மூல நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், காரமான உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள். காரமான உணவுகளும், மசாலா பொருட்களும் செரிமான மண்டலத்தை எரிச்சலூட்டும்.
பால் பொருட்கள் அதிகம் உட்கொள்வது வாயு, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். மீன், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் வறுத்த உணவுகள், காஃபின் நிறைந்த காபி, டீ போன்ற பானங்கள் அதிகமாக உட்கொள்வது நீரிழப்புக்கு வழி வகுக்கும். எனவே, இவற்றை உட்கொள்வதை குறைக்கவும். அதிக உப்பு நிறைந்த உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் மலச்சிக்கலை உண்டுபண்ணும்.
மூல நோய்க்கு சிறந்த உணவுகள்:
இலை காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி, காலிபிளவர், புரோக்கோலி, முட்டைகோஸ், முள்ளங்கி, கீரைகள் போன்றவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்ததாகும். இவை பைல்ஸ் எனப்படும் மூல நோயை தடுக்கவும் உதவும்.
அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் மென்மையான குடல் இயக்கங்களை பராமரிக்கும். முழு தானியங்கள், பச்சை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளதால் மலத்தை கடினமாக்காமல் இருக்க உதவும். இது மூலநோயை வராமல் தடுக்க பெருமளவில் உதவுகிறது.
வாழைப்பழம், தக்காளி, சிட்ரஸ் பழங்கள் மூல நோய்க்கு அருமையான தீர்வாகும். முளைவிட்ட பருப்பு வகைகள், சோயாபீன்ஸ், கொண்டைக்கடலை போன்றவற்றோடு தேவையான அளவு தண்ணீர் அருந்துவது நல்லது. எல்லா பிரச்னைகளுக்கும் தண்ணீர் சிறந்த தீர்வு. உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வது மலச்சிக்கலை போக்குவதுடன் மூல நோய் வராமல் தடுக்கவும் உதவும். முள்ளங்கி சாறு குடல் தொடர்பான பிரச்னைகளை தீர்க்கிறது. தயிர் போன்ற புரோபயாடிக் நிறைந்த உணவுகள் குடலை ஆரோக்கியமாக பராமரிக்கிறது.