‘மாஸ்டர் ஆன்டி ஆக்ஸிடன்ட்’ எனக் கூறப்படும் குளூட்டதியோன் (Glutathione) கல்லீரலில் அமினோ அமிலங்களின் உதவியால் உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருள். இது திசுக்களின் கட்டமைப்பு மற்றும் சீரமைப்பு, சில வகை கெமிக்கல்ஸ் மற்றும் புரோட்டீன்களின் உற்பத்தி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற உடலுக்குத் தேவையான பல செயல்களைச் செய்யக் கூடியது. ஊட்டச்சத்து குறைபாடு, ஸ்ட்ரெஸ், வயது முதிர்வு போன்ற காரணங்களால் இதன் உற்பத்தி குறையும்போது சோர்வடைதல் போன்ற உடல் நலக் கோளாறுகள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும். குளூட்டதியோன் அளவை சமநிலைப்படுத்த இந்தச் சத்து அடங்கிய உணவுகளை உண்பது அவசியமாகிறது. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
குளூட்டதியோன் உற்பத்திக்கு உதவும் கூட்டுப்பொருளான சிஸ்டேய்னை (Cysteine) உள்ளடக்கிய வே (Whey) புரோட்டீன், சல்ஃபர் அதிகம் உள்ள பூண்டு, வெங்காயம், முட்டைக்கோஸ், புரோக்கோலி போன்ற க்ரூஸிஃபெரஸ் காய்களில் உள்ள சிஸ்டேய்ன் என்ற முக்கியமான அமினோ அமிலம் குளூட்டதியோன் உற்பத்திக்கு பெரிதும் உதவி புரியும்.
ஊட்டச்சத்து நிறைந்த அவகோடா பழத்தில் குளூட்டதியோன் உள்ளது. அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கொண்ட தக்காளி மற்றும் ஆரஞ்சு பழங்களிலும் குளூட்டதியோன் உற்பத்திக்கு உதவும் கூட்டுப்பொருட்கள் உள்ளன.
பசலைக் கீரையில் குளூட்டதியோன் மற்றும் மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. புரோக்கோலி மற்றும் ஆஸ்பராகஸ் போன்ற காய்களில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் குளூட்டதியோன் போன்றவை உடலின் நச்சுக்களை வெளியேற்றவும் துணை புரிகின்றன.
பால் பொருட்கள், முட்டை, சிக்கன், பருப்பு மற்றும் பயறு வகை போன்ற அதிக புரோட்டீன் அடங்கிய உணவுகள், ஸ்ட்ரா பெரி, கிவி, பப்பாளி, பெல் பெப்பர் மற்றும் வைட்டமின் C அடங்கிய சிட்ரஸ் வகைப் பழங்கள், பாதாம், வால் நட், ஃபிளாக்ஸ், சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றிலும் குளூட்டதியோன் உள்ளது.
டர்க்கி (Turkey), பிரேஸில் நட் மற்றும் சூரியகாந்தி விதைகளில் செலீனியம் என்ற கனிமச்சத்து உள்ளது. செலீனியம் குளூட்டதியோன் உற்பத்திக்கு உதவும் குணமுடையது. மில்க் திசில் (Milk Thistle) என்ற மூலிகையில் கல்லீரலைக் காக்கும் குணம் உள்ளது. இது குளூட்டதியோன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
எலும்புச் சாற்றில் (Bone Broth) குளூட்டதியோன் உற்பத்திக்கு உதவும் பல வகை அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. இயற்கை முறையில் குளூட்டதியோன் தரக்கூடிய மேற்கண்ட உணவுகளை அடிக்கடி உட்கொள்வது ஸ்மார்ட்டான வழியில் நம் உடலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் அளவை உயர்த்த உதவும்.