
இன்றைக்கு இருக்கும் காலக்கட்டத்தில் நிறைய பேர் ரத்தச்சோகையால் அவதிப்படுகிறார்கள். இந்த ரத்தச்சோகைக்கு மிகமுக்கிய காரணம், சரியான ஊட்டச்சத்து உள்ள உணவை எடுக்காததும், ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்தாலும் அதன் சத்துக்கள் முழுமையாக உடலில் சென்று சேராமல் இருப்பதும்தான். இதனால் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க இரும்புச்சத்து மிகவும் இன்றியமையாததாகும். சராசரியாக ஆண்களுக்கு ஒருநாளைக்கு எட்டு மில்லி கிராம் இரும்புச்சத்து போதுமானதாகும். இதுவே பெண்களுக்கு பதினாறு மில்லி கிராம் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இப்பதிவில் ரத்தத்தில் உள்ள ஹீமோகிளோபினை எப்படி அதிகரிப்பது என்பதை விரிவாக காண்போம்.
ஒரு கைப்பிடி அளவு உலர்ந்த கருப்பு திராட்சையை முதல்நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து அடுத்தநாள் காலையில் அதை மிக்ஸியில் அடித்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி தினமும் சாப்பிட்டு வர ஹூமோகிளோபின் அளவு அதிகரிக்கும்.
மாதுளையில் நாட்டு மாதுளை பயன்படுத்துவதே சிறந்ததாகும். இதை தினமும் ஜூஸாக்கி குடிப்பது ரத்தச்சோகையை வெகுவாக குறைக்கும்.
ரத்தச்சோகை பிரச்னையை குணமாக்க கீரைகளை எடுத்துக் கொள்வது நல்லது. முக்கியமாக அனீமியா போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் முருங்கக்கீரையை எடுத்து வருவது நல்லது. ஏனெனில், இதில் மற்ற கீரைகளைக் காட்டிலும் அதிக இரும்புச்சத்து உள்ளது. கீரை பிடிக்காதவர்கள் பீட்ரூட்டை அதிக அளவு உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அசைவ உணவை சாப்பிடுவோர் ஆட்டு ஈரல் மற்றும் ஆட்டு ரத்தத்தை அதிக அளவு எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிகப்படியான இரும்புச்சத்து மற்றும் புரதம் இருக்கிறது.
கத்தரி, கேரட், பீட்ரூட், சுரைக்காய் என்று அனைத்து காய்கறிகளையும் சேர்த்து காய்கறி சூப் செய்து குடிக்கலாம்.
தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடும் போது அதில் இருக்கும் ப்ரீபயோட்டிக்ஸ் நாம் சாப்பிட்ட உணவில் உள்ள சத்துக்களை குடல் முழுவதுமாக உறிஞ்சி உடலுக்கு அனுப்புவதற்கு உதவுகிறது.
இரவு உணவு சாப்பிட்ட பிறகு 1 தேக்கரண்டி திரிபலா சூரணத்தை சூடான தண்ணீரில் சேர்த்து குடித்து வர உடலில் ரத்த உற்பத்திக்கு பெரிதும் உதவும்.
இந்த உணவுகளை தினமும் நம் சாப்பாட்டில் சேர்த்து வந்தால் ஹீமோகிளோபின் ரத்தத்தில் அதிகரித்து அனீமியா நோய் குணமாகும்.