பிளேட்லெட் என்பது எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாக்கப்படும் நிறமற்ற, ஒட்டும் தன்மை கொண்ட தட்டு வடிவ சிறிய செல். இவை உடலின் எந்த பகுதியில் இரத்தக் கசிவு ஏற்பட்டாலும் அதை உறையச் செய்து மேலும் இரத்தம் வெளியேறாதபடி தடுத்து நிறுத்தும். இரத்தத்தில் இவற்றின் எண்ணிக்கை குறையும்போது மூக்கிலும் ஈறுகளிலும் இரத்தக் கசிவு தென்படும். சிறப்பான சீரிய பணியை செய்துவரும் இவ்வகை இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை சம நிலையில் வைப்பது மிகவும் அவசியம். வைரஸ் நோய், கேன்சர், மரபணு காரணமாய் இவற்றின் எண்ணிக்கை குறைய வாய்ப்புண்டு. இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க நாம் உண்ண வேண்டிய உணவுகளின் பட்டியலை இந்தப் பதிவில் பார்ப்போம்.
அரை கப் கோதுமைப் புல்லின் சாற்றுடன் சில சொட்டு லெமன் ஜூஸ் சேர்த்து அருந்துவது நல்ல பயன் தருமென, ‘இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் யூனிவர்சல் பார்மசி அண்ட் லைஃப் சயின்ஸ்’ ஆய்வில் கண்டறியப்பட்டு, 2011ம் ஆண்டு பதிப்பில் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
பப்பாளி பழம், இலை, மாதுளம் பழ விதைகளில் உள்ள ஆக்சிஜனேற்ற அழற்சி எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்புப் பண்புகள் நல்ல பலன் அளிக்க வல்லவை. ஒரு கப் விதைகளை அப்படியே சாப்பிடுவது நலம். பூசணிக் காயில் உள்ள வைட்டமின்கள், செல்களால் உற்பத்தி செய்யப்படும் புரதங்களின் அளவை சமநிலைப்படுத்தி பிளேட்லெட்களின் எண்ணிக்கை உயர உதவுகிறது. ஆரஞ்சு, கிவி, லெமன், குடை மிளகாய், புரோக்கோலி ஆகியவற்றில் உள்ள வைட்டமின் Cயானது சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்றி. இது ஃபிரி ரேடிக்கல்களால் உண்டாகும் சேதத்தை தடுக்க வல்லது.
முட்டைக்கோஸ், வெந்தயக் கீரை, காலே, பசலைக்கீரை போன்ற கீரை வகைகளில் வைட்டமின் K சத்து அதிகம் உள்ளது. ஒரு கப் காலேயில் 547 மைக்ரோ கிராம் வைட்டமின் K உள்ளது. பால், கேரட், பீட்ரூட், தானியங்கள், வைட்டமின் B12 அடங்கிய முட்டை, இரும்புச் சத்து நிறைந்த திராட்சை, போலேட் சத்து நிறைந்த வேர்க்கடலை, கொண்டைக் கடலை, கிட்னி பீன்ஸ், ஆரஞ்சு, நெல்லிக்காய் ஜூஸ், ஆரோக்கியக் கொழுப்பு நிறைந்த தேங்காய் எண்ணெய் போன்ற அனைத்துமே பிளேட்லெட் எண்ணிக்கையை உயர்த்த உதவுவதால், இவற்றை தினசரி உணவில் சேர்த்து உட்கொண்டு ஆரோக்கியம் பெறுவோம்.