VNG Tool Medical Equipment
VNG Tool

அடிக்கடி தலைச் சுற்றுகிறதா? சரிசெய்ய வந்தாச்சு VNG கருவி!

Published on

மருத்துவ உலகில் நோய்களைக் கண்டறியவும், அதனைத் தீர்க்கவும் பல புதிய தொழில்நுட்பங்கள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கின்றன. அவ்வகையில் தலைச் சுற்றலைக் கண்டறியும் புதிய கருவி தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்தக் கருவியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து விவரிக்கிறது இந்தப் பதிவு.

நம்மில் சிலருக்கு அடிக்கடி தலைச் சுற்றுவது போன்ற உணர்வு ஏற்படலாம். சற்று நேரம் தூங்கி ஓய்வெடுத்தாலே சிலருக்கு இப்பிரச்சினை சரியாகி விடும். இருப்பினும் தலைச் சுற்றல் ஏன் வருகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும். பொதுவாக காதில் ஏற்படும் பிரச்சினை காரணமாக, உடல் சமநிலையை இழக்க நேரிடும். இம்மாதிரியான சமயத்தில் தலைச் சுற்றல் ஏற்படும் அல்லது நம்மைச் சுற்றியிருக்கும் பொருள்கள் சுற்றுவது போல் இருக்கும்.

இந்தப் பிரச்சினை 30 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் வரலாம். இருப்பினும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 100 பேரில் 10 பேருக்கு தலைச் சுற்றல் ஏற்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. இதில் ஆறுதல் என்னவென்றால், தலைச் சுற்றலால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாது என்பது தான். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் தலைச் சுற்றலைக் கண்டறியும் புதிய கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீடியோ நிஸ்டாக்மோ கிராபி (Video Nystagmo Graphy) என்ற புதிய கருவியின் மூலம், கண்களின் அசைவை வைத்தே தலைச் சுற்றலைக் கண்டறிய முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தலைச் சுற்றல் சாதாரண ஒன்றாக இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், தற்போதுள்ள சூழலில் எண்ணற்ற நோய்கள் புதிது புதிதாக உருவெடுக்கின்றன. ஆகையால் அடிக்கடி தலைச் சுற்றுவதை நாம் மிகச் சாதாரணமாக கடந்து விட முடியாது. தலைச் சுற்றலுக்கான காரணத்தைக் கண்டறிய கண்களின் அசைவை ஆதாரமாக்கி, அதனை வீடியோவில் வரைபடமாக காண்பிக்கிறது VNG கருவி. இந்தப் புதிய தொழில்நுட்பக் கருவி மதுரை அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டைப் பிரிவில் அறிமுகமானது.

இதையும் படியுங்கள்:
கால்களில் வீக்கம் – எதனால் ஏற்படுகிறது? குறைக்கும் வழிகளும் சிகிச்சை முறைகளும்!
VNG Tool Medical Equipment

காதுகளின் உள்பகுதி அமைப்பு, உடல் சமநிலை மற்றும் நிலையான தகவல்களைப் பராமரிக்க உதவி புரிகிறது. இந்தப் பகுதியில் ஏற்படும் சமநிலை மாற்றத்தால் தான் தலைச் சுற்றல் உண்டாகிறது. VNG பரிசோதனை என்பது, கண்களின் இயல்பான அசைவுகளைப் பின்தொடரும் முறையாகும். அதாவது நமக்கு தலையின் வலது மற்றும் இடது புறம் என எந்தப் பக்கம் தலைச் சுற்றல் ஏற்பட்டாலும், அது கண்களிலும் அதே பகுதியில் எதிரொலிக்கும். VNG பரிசோதனையில் கண்ணாடி போன்ற ஒரு தொழில்நுட்பக் கருவியை நோயாளிகள் அணிந்து கொண்டால், அவர்களது தலையசைவு மாற்றங்களுக்கு ஏற்ப கண்களின் அசைவிலும் மாற்றம் ஏற்படுவதைக் கண்டறியலாம். இந்த மாற்றமானது வீடியோ வடிவில் வரைபடமாகத் தெரியும்.

இந்த வரைபடத்தின் மூலம், உடல் சமநிலை அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன என்பதை மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும். இதன்மூலம் சரியான நேரத்தில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவது மட்டுமின்றி, மீண்டும் தலைச் சுற்றல் ஏற்படுவதையும் தடுக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com