

குளிர்காலம் வந்தாலே எல்லோருக்கும் உடல் நிலை பாதிக்கப்படும். அதிலும் குறிப்பாக இந்த குளிர்காலம் முதியவர்களிடையே அதிக அளவில் உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். இந்தப் பருவத்தில் சில நோய்கள் அவர்களிடையே அதிகம் காணப்படும். குளிர்காலத்தில் (Winter) அவர்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்னைகள் என்னென்ன மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளையும் இப்பதிவில் பார்க்கலாம்.
சுவாச நோய்த் தொற்றுகள்:
குளிர்காலத்தில் மாசுபட்ட சுவாசத் துளிகள் காற்றில் எளிதாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவி நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன. முதியவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அவர்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.
ஃப்ளூ / சளி–ஜலதோஷம்:
குளிர்காலத்தில் ஃப்ளூ வைரஸ் காற்றில் விரைவாகப் பரவி காய்ச்சல், குளிர், தலைவலி, உடல்வலி, சோர்வு, இருமல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தொண்டை எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும். இன்ஃப்ளுயன்சா வைரஸ் ஃப்ளூவையும், ரைனோவைரஸ் சாதாரண சளியையும் ஏற்படுத்துகிறது.
நிமோனியா:
இது பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படும் கடுமையான நுரையீரல் தொற்றாகும். காய்ச்சல், கபத்துடன் கூடிய இருமல், மார்பு வலி, மூச்சுத்திணறல் ஆகியவற்றை இது ஏற்படுத்தும்.
மூச்சுக்குழாய் அழற்சி:
மார்புச் சளி என அறியப்படும் இது காற்றுப் பாதைகளில் அழற்சியுடன் கோழை உற்பத்தியை ஏற்படுத்தும். நோயாளிகள் வாரக்கணக்கில் நாள்பட்ட இருமலால் அவதிப்படுவார்கள்.
சைனஸ் தொற்று:
சளி அல்லது பருவகால ஒவ்வாமையால் ஏற்படும் சைனஸ் தொற்றால், சைனஸ் குழிகளில் சளி நிரம்பி தலைவலி, இருமல், மூக்கடைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
தொண்டைப்புண்:
குளிர் மற்றும் பிற வைரஸ்கள் தொண்டைப்புண்ணை ஏற்படுத்தும். அதே சமயத்தில் கடுமையாகத் தொற்றக்கூடிய குரூப் A ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியா தொற்றாலும் இது ஏற்படலாம். இது தொண்டை, டான்சில்கள் மற்றும் அருகிலுள்ள நிணநீர் முடிச்சுகளில் அழற்சியை ஏற்படுத்தி, விழுங்குவதில் வலியை ஏற்படுத்தும்.
ஆஸ்துமா:
ஏற்கனவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்துமாடிக் பிராங்கைட்டிஸ் காரணமாக மூச்சுத்திணறல் மற்றும் வீசிங் மோசமடையலாம்.
மூட்டு வலி:
குளிர்காலத்தில் ரூமடாய்டு ஆர்த்ரைடிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் மற்றும் பல்வேறு மூட்டுக் கோளாறுகள் இருப்பவர்களுக்கு மூட்டுத் திசுக்களின் விறைப்பு அதிகரிப்பதால் நிலைமை இன்னும் மோசமடைகிறது.
மாரடைப்பு மற்றும் பக்கவாதம்:
குறைந்த வெப்பநிலையில் ரத்த நாளங்கள் சுருங்குவதால் இதயம் மற்றும் மூளைக்கான ரத்த ஓட்டம் குறைந்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகள் குளிர்காலத்தில் சற்று அதிகமாக ஏற்படுகிறது.
வறண்ட தோல் மற்றும் அரிப்பு:
வயதானவர்களுக்கு பொதுவாகவே தோல் வறண்டு காணப்படும். குளிர்காலத்தில் வறட்சி அதிகரித்து அரிப்பை ஏற்படுத்தும். அதன் காரணமாக அடிக்கடி சொரிவதால் தோல் உரிதல் ஏற்படும். தோல் வெடிப்பு, ரத்தக்கசிவு, வலி மற்றும் தொற்று ஏற்பட்டு சில சமயங்களில் முறையான சிகிச்சை தேவைப்படும். சோரியாசிஸ், எக்சிமா போன்ற பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்.
அதிக நீர், குறிப்பாக தொண்டை வறட்சியைத் தவிர்க்க அவ்வப்போது வெது வெதுப்பான நீரை சிறுசிறு துளிகளாக அருந்த வேண்டும்.
இருமும் போதும், தும்மும் போதும் வாயை கைக்குட்டை அல்லது டிஷ்யூவால் மூடிக் கொள்ள வேண்டும்.
சளி உள்ளவர்களிடமிருந்து சற்று தூரமாகவே முதியவர்கள் இருக்க வேண்டும். அவர்களின் ஆடைகள், போர்வைகள், கைக்குட்டைகள் போன்றவற்றை முதியவர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
அடிக்கடி கைகளை வெது வெதுப்பான நீர் மற்றும் சோப்பால் கழுவ வேண்டும்.
தினமும் ஒருமுறை ஆவி பிடிக்க வேண்டும் (இது தொண்டையை சுத்தம் செய்து தலைவலியையும் குறைக்கும்).
தினமும் 2-3 முறை உப்பு நீரால் வாய் கொப்பளிப்பது தொண்டைப்புண் மற்றும் டான்சிலைட்டிஸுக்கு உதவும்.
வெது வெதுப்பான ஆடைகள், எடை குறைப்பு, மூட்டுக்களின் இயக்கத்துக்கான சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, தினமும் 15 நிமிடங்கள் கை கால்களை வெதுவெதுப்பான நீரில் மூழ்க வைப்பது போன்றவை மூட்டு வலிகளைக் குறைக்க உதவும்.
இரவு நேரங்களில் திறந்த வெளியில் அல்லது மாடியில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
தோல் வறட்சி குளிர்காலத்தில் மோசமடைந்து அரிப்பை ஏற்படுத்தும். எனவே, தோலை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க மருத்துவர்கள் பரிந்துரைத்த மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்த வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளும் அரிப்புக்கு நிவாரணம் அளிக்கும்.
இவைகளை எல்லாம் கடைபிடித்த பிறகும் முதியவர்களுக்கு ஏதாவது உடல் ரீதியான பிரச்சனைகள் சரியாக வில்லை என்றாலோ அல்லது நாள்பட்ட தொந்தரவுகள் இருந்தாலோ அவர்களை உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.
மேற்கூறிய நடவடிக்கைகளை மட்டுமே கடைபிடிக்காமல் அவ்வப்போது அவர்களை மருத்துவரிடம் காண்பித்து தக்க ஆலோசனைகளை பெற்று அதையும் கடைப்பிடிக்கவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)