மூங்கில் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது வீடுகள் கட்டுவதற்குப் பயன்படும் உறுதியான மரங்களும், சுவையான மூங்கில் அரிசி பாயசமும் தான். ஆனால், மூங்கிலின் ஒவ்வொரு பாகத்திலும் மறைந்திருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. மூங்கில் இலைகள், கணுக்கள், வேர்கள் மற்றும் விதைகள் என அதன் ஒவ்வொரு பகுதியும் பல நோய்களை குணப்படுத்த வல்லது.
பல் பளபளக்க மூங்கில் சாம்பல்:
பற்கள் வெள்ளையாகவும் பளபளப்பாகவும் மாற வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். மூங்கில் இலையை நன்கு உலர்த்தி, அதனை எரித்து வரும் சாம்பலைக் கொண்டு பல் துலக்கினால் பற்கறைகள் நீங்கி பற்கள் பளிச்சிடும். அதே போல, உடலில் எங்காவது முள் குத்திக் கொண்டால் மூங்கில் இலையை அரைத்து அந்த இடத்தில் வைத்தால் முள் தானாகவே வெளியே வந்துவிடும்.
மூங்கில் இலையை இடித்து சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்தால் இருமல் உடனடியாக குணமாகும். மேலும், மூங்கில் இலை சாம்பலை புண்கள் மீது தூவினால் அவை விரைந்து ஆறும்.
பெண்களுக்கான அற்புத மருந்து:
மகப்பேறு காலத்தில் ஏற்படும் இரத்தப் போக்கு (உதிரச் சிக்கல்) பெண்களுக்கு பெரும் சவாலாக அமையும். இதனைத் தீர்க்க மூங்கிலின் மேல்தோல், கருஞ்சீரகம், மஞ்சள் ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரை லிட்டர் நீரில் கொதிக்க வைக்க வேண்டும். அது கால் லிட்டராக கொதித்து வற்றியவுடன் பனைவெல்லம் கலந்து கொடுத்தால் உதிரச்சிக்கல் தீரும்.
இளம் மூங்கில் குருத்தை 100 கிராம் அளவு எடுத்து இரண்டு லிட்டர் நீரில் கொதிக்க வைத்து, ஒரு லிட்டராகக் காய்ச்சி குடித்துவந்தால் கருப்பையில் உள்ள அழுக்குகள் வெளியேறும். மேலும், சூதகக் கட்டு, வெள்ளைப்படுதல், குடற்புழுக்கள் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கும் இது ஒரு சிறந்த தீர்வாகும்.
நீரிழிவு நோய்க்கு (diabetes) ஒரு எளிய வழி:
நீரிழிவு நோயாளிகள் மூங்கில் அரிசி உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் நோயின் தீவிரத்தைக் குறைக்க முடியும். மூங்கில் அரிசி பாயாசம் வெறும் சுவையான இனிப்பு மட்டும் அல்ல, அது நீரிழிவு நோய்க்கு (diabetes) ஒரு அற்புதமான மருந்தாகவும் செயல்படுகிறது. மூங்கில் அரிசி மாவில் கஞ்சி செய்து குடிக்கும் போது சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.
மேலும், கால்நடைகளுக்கும் மூங்கில் ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. கன்று ஈன்ற பசுவின் நஞ்சுக்கொடி வெளியேற தாமதமானால், மூங்கில் இலைகளை அதற்கு உண்ணக் கொடுத்தால் நஞ்சுக்கொடி எளிதாக வெளியேறிவிடும்.
மூங்கிலின் மருத்துவக் குணங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டு, ஒரு நல்ல மருத்துவரிடம் ஆலோசனைகளைப் பெற்று, உரிய நேரத்தில் பயன்படுத்தினால் ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)