கீலாய்டு (Keloid) தழும்பு என்பது சாதாரண தழும்பை விட அதிகமாக வளர்ந்து, அசாதாரண வடிவிலும், அளவிலும் காணப்படும் ஒரு வகை தழும்பு. இது பொதுவாக காயம் அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிறகு உருவாகிறது. இத்தகைய தழும்புகள் தோற்றத்தில் மட்டுமல்லாமல், மனரீதியாகவும் பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் கீலாய்டு தழும்புகள் பற்றிய முழு விவரத்தைப் பார்க்கலாம்.
ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், அந்த காயம் ஆறும்போது உடலில் இயற்கையாகவே உற்பத்தியாகும் கொலாஜன் எனும் புரதம் அதிகமாக உற்பத்தியாகி, தோலின் மேற்பரப்பில் தடிமனாக வளர்ந்து உருவாகும் ஒரு வகை தழும்புதான் Keloid. இது பொதுவாக காயம் அடைந்த இடத்தை விட பெரிய பரப்பளவில் பரவி சில சமயங்களில் அரிப்பு, வலி போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.
கீழாயுடு தழும்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:
ஏற்கனவே குடும்பத்தில் இந்த தழும்பு உள்ளவர்களுக்கு இது ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இருண்ட சரும நிறம் உடையவர்களுக்கு இது அதிகமாகக் காணப்படுகிறது. மேலும், காயத்தின் வகையைப் பொருத்தும் இது உண்டாகலாம். அதாவது ஆழமான காயங்கள், அறுவை சிகிச்சை, தீக்காயங்கள் போன்றவை கீலாய்டு தழும்புகள் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். இவை குறிப்பாக மார்புத், தோள், காதுகள் போன்ற பகுதிகளில் அதிகமாக உருவாகிறது.
அறிகுறிகள்:
காயம் அடைந்த இடத்தை விட பெரிய பரப்பளவில் தழும்பு ஏற்படும்.
இது தடிமனாகவும், பெரிதாகவும் வளர்ந்து இருக்கும்.
சிலருக்கு அரிப்பு, வலி போன்றவை இருக்கும்.
தோலின் நிறம் மாறிவிடும்.
தழும்பின் நிறம் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக இருக்கும்.
கீலாய்டு தழும்புகளை சரி செய்வதற்கு பல்வேறு விதமான சிகிச்சை முறைகள் உள்ளன. முதற்கட்டமாக ஊசி, கிரீம் போன்றவை இந்தத் தழும்பின் வளர்ச்சியைக் குறைக்க பயன்படுத்தப்படும். பெரிய அளவிலான கீலாய்டு தழும்புகளை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்யப்படலாம். அறுவை சிகிச்சைக்குப் பிறகும் மீண்டும் தழும்பு வராமல் தடுக்க, கதிரியக்க சிகிச்சை செய்யப்படலாம். தழும்பின் வளர்ச்சியைக் குறைப்பதற்கு ப்ரோசன் சிகிச்சை செய்யப்படும். தழும்பின் தோற்றத்தை மாற்றுவதற்கு லேசர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
இதுபோன்ற தழும்புகள் ஏற்படாமல் இருக்க காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டியது அவசியம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். சூரிய ஒளியில் இருந்து எப்போதும் தழும்பைப் பாதுகாக்க வேண்டும். காயத்தால் ஏற்பட்ட தழும்பு மீது அழுத்தம் கொடுக்காமல் இருக்க வேண்டும். இதுபோன்ற தழும்புகள் உருவாவது தெரிந்தால், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், சரியான தடுப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம் கீலாய்டு தழும்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.