Water Fasting என்பது குறுகிய காலத்தில் அதிக எடையை குறைக்க உதவும் என்று கூறப்படும் ஒருவகை உணவு முறை. இந்த உணவு முறையில் திட உணவுகளை முற்றிலுமாகத் தவிர்த்து தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும். விரைவாக உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்த முறையை பின்பற்றுவார்கள். ஆனால், இது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
வாட்டர் ஃபாஸ்டிங் ஒரு தீவிரமான உணவு முறையாகும். இதில் நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு திட உணவுகளை உணவே கூடாது. இந்த காலகட்டத்தில் நீங்கள் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். சில வாட்டர் ஃபாஸ்டிங் முறைகளில் பழச்சாறு குடிக்கலாம். இந்த உணவு முறையின் நோக்கம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடல் எடையைக் குறைப்பதாகும்.
வாட்டர் பாஸ்டிங் மொத்தம் மூன்று வகைகளில் இருக்கலாம். முதலாவது, நீங்கள் வெறும் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். வேறு எந்த விதமான உணவையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இரண்டாவது முறையில், தண்ணீருடன் சேர்த்து பழச்சாறுகளைக் குடிக்கலாம். இறுதியாக, தண்ணீருடன் சேர்த்து அருகம்புல் ஜூஸ், கற்றாழை ஜூஸ் போன்ற இயற்கையான சாறுகளைக் குடிப்பது ஒரு வகை.
நன்மைகள்: ஒரு வாரத்தில் வீட்டில் ஏதோ ஒரு நிகழ்வு இருக்கிறது, அதற்காக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் இந்த ஃபாஸ்டிங் முறையை நீங்கள் முயற்சிக்கலாம். இதனால், உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறி உடல் சுத்தமாகும். மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தி வயிறு சார்ந்த பிரச்சனைகளை சரி செய்யும்.
தீமைகள்: திடீரென உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தடைபடும்போது ரத்த அழுத்தம், தலைச்சுற்றல், மயக்கம், தசைவ வலி, மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சில சமயங்களில் இதயப் பிரச்சினைகள், சிறுநீரகப் பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். இதை நீண்ட காலத்திற்கு பின்பற்றக்கூடாது. மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே முயற்சிப்பது நல்லது. அதுவும் 24 முதல் 36 மணி நேரம் முயற்சிப்பது ஆரோக்கியமானது.
வாட்டர் ஃபாஸ்டிங் இருப்பதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவை:
உங்களது உடல் நிலையைப் பற்றி அறிந்து கொள்ள நிச்சயம் ஒரு மருத்துவரை அணுகி கலந்தாலோசிப்பது நல்லது. இதனால், உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது என்பதால், இதை உங்களது சொந்த விருப்பத்தின் பேரில் முயற்சிக்கவும். இந்த ஃபாஸ்டிங் முறையைப் பின்பற்றிய பிறகு படிப்படியாக ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுங்கள்.
குறுகிய காலத்தில் உடல் எடையை குறைப்பதற்கு இந்த பாஸ்டிங் முறை உதவும் என்றாலும், இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, இதை முயற்சிப்பதும் முயற்சிக்காமல் இருப்பதும் உங்கள் விருப்பமே. பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக எதையும் முயற்சிக்க வேண்டாம்.