

நம்மில் பலருக்கும் காலையில் எழுந்தவுடன் சூடாக பால் காய்ச்சி ஒரு கப் டீ அல்லது காபி குடிப்பது வழக்கம். ஆனால், பால், சர்க்கரை போட்ட டீக்கு பதிலாக, பூண்டு மட்டுமே பயன்படுத்தி டீ போட்டு குடிப்பதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா?
பூண்டு டீயால் நம் உடலுக்குக் கிடைக்கும் நம்பமுடியாத நன்மைகள் மற்றும் அதைச் சரியான முறையில் எப்படித் தயாரிப்பது என்பது குறித்து மிகத் தெளிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க.
பூண்டு டீயின் மகத்தான நன்மைகள்!
1. பூண்டின் முழு மருத்துவ குணத்திற்கும் காரணம் அதில் உள்ள 'அல்லிசின்' என்ற வேதிப்பொருள் தான். பூண்டை நசுக்கும்போதுதான் இந்த அல்லிசின் உருவாகிறது. இது இயற்கையான ஆன்டி-பயாடிக் ஆகச் செயல்பட்டு, உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கிறது.
2. பூண்டு டீ தொடர்ந்து குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கணிசமாகக் குறையும். மேலும், இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கி, இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதுடன், மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வரும் அபாயமும் தடுக்கப்படுகிறது.
3. சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் அடிக்கடி வருகிறதா? பூண்டு டீ ஒரு சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாகும். குறிப்பாக மழை மற்றும் குளிர்காலங்களில் இதைக் குடிப்பது தொண்டை கரகரப்பு மற்றும் நெஞ்சுச் சளியைக் கரைத்து வெளியேற்ற உதவும்.
4. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்குப் பூண்டு டீ ஒரு வரப்பிரசாதம். இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, தேவையற்ற கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. மேலும், செரிமானக் கோளாறுகள், வாயுத் தொல்லை மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.
பூண்டு டீ எப்படிச் சரியாகத் தயாரிப்பது?
பூண்டு டீ தயாரிக்க அதை அப்படியே முழுசாகப் போட்டுக் கொதிக்க வைத்தால் எந்தப் பலனும் இல்லை.
முதலில் 2 அல்லது 3 பல் பூண்டை எடுத்து, தோலுரித்து நன்றாக நசுக்கிக் கொள்ள வேண்டும். நசுக்கிய பூண்டை அப்படியே ஒரு 10 நிமிடம் காற்றில் விட்டுவிட வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள அல்லிசின் முழுமையாக வெளிப்படும்.
பின்னர், ஒரு டம்ளர் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, அதில் இந்த நசுக்கிய பூண்டைப் போட வேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு மூடி போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும்.
பிறகு இதை வடிகட்டி, சுவைக்காகச் சிறிது எலுமிச்சைச் சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து மிதமான சூட்டில் குடிக்கலாம்.
யாரெல்லாம் குடிக்கக் கூடாது?
பூண்டு டீ நல்லதுதான், அதற்காகத் தினமும் லிட்டர் கணக்கில் குடிக்கக் கூடாது. ஒரு நாளைக்கு ஒரு கப் போதுமானது. அதிகமாகக் குடித்தால் நெஞ்செரிச்சல் அல்லது வயிற்றுப் புண் வரலாம்.
ஏற்கனவே தீவிரமான அல்சர் பிரச்னை உள்ளவர்கள், அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருப்பவர்கள், மற்றும் ரத்தம் மெலிதாவதற்கான மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் டாக்டரின் ஆலோசனை இல்லாமல் இதைக் குடிக்கக் கூடாது. கர்ப்பிணிப் பெண்களும் இதைக் கவனமாகக் கையாள வேண்டும்.
நமது சமையலறையே ஒரு பெரிய மருத்துவமனை தான். பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் மாத்திரைகளை விட, மிகக் குறைந்த செலவில் கிடைக்கும் பூண்டு நம் உடலுக்குச் செய்யும் நன்மைகள் அதிகம். காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த ஆரோக்கியமான பூண்டு டீயைக் குடித்து உங்கள் நாளைத் தொடங்குங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)