பொதுவாக, சீஸ் (Cheese) என்பது ஓர் ஆரோக்கியம் நிறைந்த, அனைவராலும் விரும்பப்படும் உணவாகும். இது பால் மற்றும் தாவரப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சீஸில் உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து, புரதம், கால்சியம், பாஸ்பரஸ், சிங்க் மற்றும் பல வைட்டமின் சத்துக்களும் நிறைந்துள்ளன. பாலிலிருந்து தயாரிக்கப்படும் சீஸ் மாட்டுப்பால் மற்றும் ஆட்டுப் பாலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இவற்றில் பசும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் சீஸில் இருப்பதை விட, ஆட்டுப்பால் சீஸில் ஆரோக்கியம் அதிகம் என்று கூறப்படுகிறது. அது எவ்வாறென்பதை இந்தப் பதிவில் காணலாம்.
ஆட்டுப்பால் சீஸ், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் A போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அதிகம் நிறைந்தது. இச்சத்துக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், தசைகளின் இயக்கத்திற்கும், உடலின் ஒட்டுமொத்த நலனுக்கும் பயனளிக்கக் கூடியவை.
பசும் பால் சீஸை விட, ஆட்டுப்பால் சீஸ் எளிதில் ஜீரணமாகக்கூடியது. ஆட்டுப்பால் சீஸில் குறைந்த அளவு லாக்டோஸ் மற்றும் மிகச் சிறிய சைஸ் கொழுப்பு உருண்டைகளே உள்ளன. இதனால் லாக்டோஸ் சகிப்புத் தன்மை இல்லாதவர்களும் பசும்பால் பொருட்கள் மீது சென்சிடிவிட்டி உள்ளவர்களும் உண்ண ஏற்றதாகிறது ஆட்டுப்பால் சீஸ்.
பசும் பால் சீஸுடன் ஒப்பிடும்போது ஆட்டுப்பால் சீஸ் குறைந்த கலோரிகள் மற்றும் குறைந்த அளவு கொழுப்புகள் கொண்டுள்ளது. இதனால் கலோரி மற்றும் கொழுப்பின் அளவை குறைத்து உட்கொள்ள விரும்புபவர்களும் அவர்களின் உணவில் ஒரு பகுதியாக ஆட்டுப்பால் சீஸை சேர்த்துக் கொள்ளலாம்.
பசும் பால் சீஸுடன் ஒப்பிடும்போது ஆட்டுப்பால் சீஸ் அதிகளவில் மீடியம் செயின் கொழுப்பு அமிலம் (MCFA) கொண்டுள்ளது. மீடியம் செயின் கொழுப்பு அமிலங்கள், மெட்டபாலிஸ செயல்பாடுகளை சுலபமாக்கவும், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கவும் கூடியவை என்று கருதப்படுகிறது.
ஆட்டுப்பால் சீஸில் கன்ஜுகேடெட் லினோலிக் அமிலம் (Conjugated linoleic acid) மற்றும் ப்யூடிரிக் அமிலம் (Butyric acid) ஆகிய கூட்டுப்பொருள்கள் அடங்கி உள்ளதாகவும் அவை ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் கொண்டு உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க உதவுகின்றன எனவும் கூறப்படுகிறது.
பொதுவாக, சீஸ்களில் அதிகளவு உப்பு சேர்த்து தயாரிக்கப்படுவதால் சீஸ் உட்கொள்ள விரும்புபவர்கள் அதை குறைந்த அளவில் எடுத்துக்கொள்வதே ஆரோக்கியம்.