

தற்போது நிறைய பேர் உணவில் விரும்பி சாப்பிடும் ஒன்றாக பீனட் பட்டர்(Peanut butter) இருக்கிறது. முக்கியமாக குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது. இது ஆரோக்கியமானது தானா என்று நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது. நிச்சயமாக ஆரோக்கியமானது, ஆனால் நீங்கள் அதை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதில் தான் விஷயம் உள்ளது. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
பீனட் பட்டர் வேர்க்கடலையை அரைத்து தயாரிக்கப்படும் உணவுப் பொருள். இதை அரைக்கும் போது அதிலிருந்து எண்ணெய் விடும். அதில் இனிப்பு கலந்து பிரெட், சப்பாத்தி, தோசை போன்ற உணவுகளுக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடுகிறார்கள். பீனட் பட்டர் தயாரிக்க 80 முதல் 90 சதவீதம் வேர்க்கடலையே பயன்படுத்தப்படுகிறது. சில கம்பெனிகள் கூடுதலாக சோயா எண்ணெய்யோ அல்லது பாமாயிலோ சேர்த்திருப்பார்கள்.
சற்று அதிக இனிப்பு சுவைக்காக 10 கிராம் சர்க்கரை சேர்த்திருப்பார்கள். 100 கிராம் பீனட் பட்டரில் 550 கலோரிகள், 25 கிராம் புரதம், 50 கிராம் கொழுப்புகள், கார்போஹைடரேட் 15 கிராம் இருக்கும். இதில் புரதம் அதிகமாக உள்ளதால், தசை வளர்ச்சிக்கு மற்றும் உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இது மிகச்சிறந்த உணவு. இதில் உள்ள mono unsaturated கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளதால், இதைச் சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் பசி எடுக்காது. இது உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு உதவும். இதில் வைட்டமின் E, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன.
வேர்க்கடலை என்பது ஆரோக்கியமான உணவு தான். ஆனால் இப்போது உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேர்க்கடலையை வேக வைத்து காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்தை தரும்.
இதுவே பீனட் பட்டரை நான்கு பிரெட் துண்டுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது அதற்கு 30 கிராம் அளவில் எடுத்துக் கொள்ளும் பீனட் பட்டர் மற்றும் கார்போஹைடரேட் ஆன பிரட்களும் சேர்த்து சாப்பிடும் போது அது ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. இது உடல் எடையை கட்டுப்படுத்தவோ உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவோ உதவாது. அதிகமாக பீனட் பட்டர் மாவுச்சத்து உள்ள உணவுகளுக்கு சைட் டிஷ்ஷாக பயன்படுத்தப்படுவதால் ஆரோக்கியமானதாக இருக்காது.
இதுவே சர்க்கரை சேர்க்காத பீனட் பட்டர் கடைகளில் கிடைக்கிறது. அதை மட்டும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டால் கூட பிரச்சையில்லை. ஆனால் இதனுடன் மாவுச்சத்து உணவை சேர்க்கும் போது அதனுடைய அளவை பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். நன்றாக இருக்கிறது என்று அதிக அளவில் பிரட், தோசை என்று பீனட் பட்டருடன் சேர்த்து சாப்பிடுவது கண்டிப்பாக ஆரோக்கியமானது கிடையாது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)