

தற்போதைய குளிர்காலத்தில் சூரிய உதயமான பிறகும் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால், நம்மில் பலரையும் அடிக்கடி பாதிப்பது சைனஸ் எனும் சளிப் பிரச்னைகள்தான். சிலர் தலையில் நீர் கோர்த்துக் கொள்வதால் ஏற்படும் தலை பாரம், தலைவலி, தும்மல் போன்றவற்றால் மூச்சு விட முடியாமல் சிரமப்படுவர்.
நமது பாட்டிகள் இந்த சளி, இருமல் போன்றவற்றை வீட்டிலுள்ள சில பொருட்களைக் கொண்டு எளிய முறையில் (Winter health care tips) குணப்படுத்தினர். அதனைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு வெற்றிலை + கற்பூரவல்லி இலை + கல் உப்பு + மஞ்சள் தூள் (கால் ஸ்பூன்) எடுத்துக் கொண்டு, அதில் நன்கு கொதிக்கும் தண்ணீரை ஊற்றி, நல்ல பெட்சீட்டால் மூடிக் கொண்டு நன்றாக ஆவி பிடிக்க வேண்டும்.
மூக்கு, வாய் வழியாக ஆவியை உள்ளிழுத்து விடுவதாலும் மற்றும் காதுகளில் படும்படி ஆவி பிடித்தால் போதும். தலைபாரம் காணாமல் போய்விடும்.
மருந்துக் கடைகளில் ஆவி பிடிப்பதற்கென்றே கிடைக்கும் மருந்து டியூப் மற்றும் விக்ஸ் உபயோகித்து ஆவி பிடிப்பதைவிட, இந்த இயற்கை முறை சிறந்த பலனைத் தரும்.
கற்பூரவல்லி + வெற்றிலையை எடுத்து லேசாக தீயில் சுட்டு, அதில் வரும் புகையை சுவாசித்து உள்ளிழுத்துவிடும் போது மூச்சு விடுவது எளிதாக இருக்கும்.
நன்கு கொதிக்கும் நீரில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து ஆவி பிடிப்பதால் தொண்டை கரகரப்பு நீங்கும்; நெஞ்சு சளி குணமாகும்.
சிறு குழந்தைகளுக்கு துளசி இலையை நன்கு பிழிந்து சாறு எடுத்து, அதனுடன் இரண்டு மிளகை பொடித்து தேன் கலந்து சாப்பிடக் கொடுத்தால் சளி, இருமல் குணமாகும்.
இரண்டு ஏலக்காயை மென்று அதன் சாற்றை விழுங்கினால் வறட்டு இருமல் குணமாகும்.
இரவு நேரத்தில் படுக்கும் போது கொஞ்சம் பொட்டுக்கடலை, நான்கு மிளகு சேர்த்து வாயில் போட்டு மெதுவாக மென்று, மிளகின் சாற்றை விழுங்கினால் போதும். காலையில் இருமல், கபம் காணாமல் போகும்.
ஒரு டம்ளர் பசும்பாலில் ஒரு ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, சூடாகக் குடித்தால் சளி, இருமல் குணமாகும்.
இஞ்சியை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டு, பிறகு வெந்நீரில் முகத்தை கழுவினால் தலைவலி நீங்கும்.