வளர்ந்து வரும் நவீன காலத்திற்கு ஏற்றவாறு நம்முடைய உணவு பழக்க வழங்கங்களும் மாறி கொண்டு வருகின்றன. அவசர அவசரமாக ஓடிக்கொண்டு இருக்கும் இந்த காலத்தி்ல் நம்முடைய உடல் ஆரோக்கியத்திலும் பல மாற்றங்கள் நடக்கின்றன. நம்மில் பலரும் பாஸ்ட் புட் போன்ற உணவுகளை வாங்கி உண்பதால் உடல்நலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், தீராத வியாதி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இவ்வகையான நோய்களில் இருந்து குறுகிய காலத்தில் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக மக்கள் பல விளம்பரங்களை பார்த்து பல உணவு பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் உடல் எடை போன்ற பல பிரச்சனைகள் சில காலங்களிலேயே சீராகி விடும் என்பது அவர்களின் நம்பிக்கை.
அந்தவகையில் காலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் இந்த புளூ டீயை குடித்து வந்தால் உடலில் ஏற்பட்டிருக்கும் பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். அது எல்லாம் சரி அது என்ன புளு டீ?, அது வேறொன்றும் இல்லை, தமிழர்களின் வாழ்வியலில் கலந்த கருவிளை பூ என்ற சங்குப்பூ டீ தான்.
இந்த சங்குப்பூ இயற்கையாகவே நீல நிறம் கொண்டது. ஆன்மீக ரீதியாக மட்டும் பார்க்கப்படும் இந்த சங்குப்பூவில் பல வகையான மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த சங்குப்பூ டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதனை எவ்வாறு தயார் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சங்குப் பூ டீ நன்மைகள்:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த சங்குப்பூ டீயை காலை வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைந்துவிடும்.
சக்கரை நோய் உள்ளவர்கள் இந்த சங்குப்பூ டீ குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு சீராக இருக்கும்.
ஞாபக மறதி உள்ளவர்கள் இந்த டீயை குடித்து வந்தால் ஞாபக மறதி பிரச்சனை தீர்ந்துவிடும்.
சங்குப்பூ டீ குடித்து வருவதால் நாளடைவில் இருந்து வந்த மனக்கவலை, மனச்சோர்வு தீர்ந்து, புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
மேலும் இந்த சங்குப் பூவை அரைத்து தயிர் மற்றும் கடலை மாவுடன் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் வசிகர அழகு கொடுக்கும். சங்குப்பூவில் கிளைகோஜன் இருப்பதால் முகத்தில் ஏற்படும் முதிர்வு தோற்றத்தை தடுத்து இளமையான தோற்றத்தை கொடுக்கிறது.
மேலும் சங்குப்பூ இரண்டு வகையான நிறத்தில் உள்ளது. நீலம் மற்றும் வெள்ளை. இவை இரண்டும் மருத்துவ குணம் வாய்ந்தது. எனவே இந்த இரு நிறத்தில் உள்ள பூக்களையும் பயன்படுத்தலாம்.
சங்குப்பூ டீ தயாரிக்கும் முறை:
இந்த சங்குப்பூ டீ செய்வது மிகவும் சுலபமான ஒன்று.
தேவையான பொருட்கள்:
சங்குப்பூ - 5 முதல் 6 பூக்கள் வரை
நாட்டு சக்கரை - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - ½ ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் எடுத்து வைத்து உள்ள சங்குப் பூக்களை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு சங்குப்பூ நன்றாக கொதித்து அதில் நீல நிறம் நன்றாக இறங்கியதும் நாட்டு சக்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதனை இறக்கி வடிகட்ட வேண்டும். இளஞ்சூட்டில் எலுமிச்சை சாறு கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இல்லையென்றால் தண்ணீரில் சங்குப் பூக்களை போட்டு கொதிக்க வைத்து அப்படியே சூடு ஆறியதும் குடிக்கலாம்.
ஆன்மீக ரீதியாக மட்டும் பயன்படுத்தப்படும் இந்த சங்குப் பூவை, இயற்கையான முறையில் உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தி வந்தால், உடல் நலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.