நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் எல்லா விதமான உடல் உறுப்புகளும் சீராக இயங்க வேண்டியது அவசியம். குறிப்பாக நமது குடல் ஆரோக்கியம் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் அடித்தளமாகும். செரிமானம், ஊட்டச்சத்து உறிஞ்சுதல், நோய் எதிர்ப்பு செயல்பாடு மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் நமது குடல் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இப்பதிவில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 7 வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்: டயட்டரி பைபர் என்பது உங்கள் உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு எரிபொருளாக செயல்படும் ஒரு பிரீ பயோடிக். இது வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவித்து மலச்சிக்கலைத் தடுத்து பல்வேறு நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஆதரிக்கிறது. எனவே நார்ச்சத்து அதிகம் நிறைந்த தானியங்கள் பழங்கள் காய்கறிகள் பருப்பு வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புளித்த உணவுகளை உட்கொள்ளுங்கள்: புளித்த உணவுகளில் ப்ரோ பயோடிக்கள் நிறைந்துள்ளன. அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியாக்களாகும். எனவே தயிர் போன்ற புளித்த உணவுகளை தினசரி தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்கவும்: அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிகப்படியான சர்க்கரை நிறைந்த உணவுகளால், குடல் பாக்டீரியாக்களின் சமநிலை சீர்குலைந்து, பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதுபோன்ற உணவுகளில் பெரும்பாலும் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், வயிற்று உபாதைகளை ஏற்படுத்தலாம். எனவே இத்தகைய உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
தண்ணீர் அதிகம் குடியுங்கள்: ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க போதுமான அளவு நீரேற்றம் அவசியம். போதிய அளவு தண்ணீர், குடலில் உணவின் இயக்கத்தை அதிகரித்து மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. எனவே ஒரு நாளைக்கு எட்டு கப் தண்ணீரைக் குடிக்க வேண்டியது அவசியம்.
மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்: நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக குடல் பாக்டீரியாவின் சமநிலை சீர்குலைந்து, பல பிரச்சினைகளுக்கு வழிவககுக்கிறது. எனவே உங்களது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
போதுமான அளவு தூங்குங்கள்: குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தூக்கம் மிக முக்கியம். சரியாக தூங்கவில்லை என்றால் குடல் பாக்டீரியாவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, குடலில் பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே குடல் செயல்பாட்டை சிறப்பாக வைத்திருக்க தினசரி ஏழு முதல் ஒன்பது மணி நேரம் தரமான தூக்கம் தேவை.
உடற்பயிற்சி செய்யுங்கள்: உடற்பயிற்சி உங்கள் இதய ஆரோக்கியம் மற்றும் மனநலத்திற்கு நன்மை பயப்பது மட்டுமில்லாமல், உங்கள் குடல் இயக்கத்திற்கு நல்ல ஆதரவை அளிக்கிறது. எனவே வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.